நிகரற்ற தளபதிகள் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று!

ஈழப் போர்களின் ஒவ்வொரு காலக்கோட்டிலும் மிகப்பெரும் சாதனைகளைச் செய்த தளபதிகள் ஈராளமானோர் வரலாற்றில் ஆழப் பதிந்துவிட்டனர்.

ஒரு போராட்ட அமைப்பு தொடர்ந்தும் போர் செய்துகொண்டிருக்கிறதெனில், அது வென்றுகொண்டிருக்கின்றதென்று போரியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள். அந்த தொடர் வெற்றியைச் சம்பாதித்துக்கொண்டிருந்த பெரும் பங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் பலரைச் சாரும்.

சரியாக இன்றுடன் பத்தாண்டுகளாகின்றன….

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மரபுவழிப் படையணிகளிலே மேஜர் சோதியா படையணியை வழிநடத்திய பிரிகேடியர் துர்க்காவும், 2ம் லெப்டினென்ட் மாலதி படையணியை வழிநடத்திய பிரிகேடியர் விதுஷாவும் அந்த படையணியின் தாக்குதல் தளபதியாக இருந்த கேணல் தமிழ்ச்செல்வியும் மோட்டார் பீரங்கி அணிகளை வழிநடத்திய கேணல் அமுதாவும் தமிழ்ப் பெண்களின் விடுதலைப் பெருநெருப்புக்கள் என்றுதான் சொல்லமுடியும்.

பிரிகேடியர் தீபன் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னியை உடைக்க முயன்ற நாற்பதாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவராவார். முகமாலை, கிளாலி, நாகர்கோவில் முதலான முன்னரங்குகள் நான்காம் ஈழப் போரில் வட போர்முனையாக அழைக்கப்பட்டன.

இந்த வட போர்முனை சிறிலங்கா இராணுவத்துக்கு மிகப்பெரிய பொறிக்கிடங்காக அமைந்தமைக்கு தளபதி தீபனின் நேரடிக் கட்டளைகள் உரமூட்டின. ஆனையிறவு சமர்க்கள நாயகனாக விளங்கிய பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பாசறையிலே சீடனாக வளர்ந்தவர்தான் வட போர்முனைக் கட்டளைத் தளபதியும் பிரிகேடியருமான தீபன்.

பிரிகேடியர் கடாபி குறிசூட்டுத் தாக்குதல் அணிகளின் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கிய ஒரு தளபதியாவார். சினைப்பர் அடி எனப்படும் குறிசூட்டுத் தாக்குதல் என்பது அனைத்துவிதமான கள நடவடிக்கைகளுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

அதேபோல், பிரிகேடியர் மணிவண்ணன் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்தவர். தாக்கி அழிப்பதிலும் எதிர்ச்சமர் புரிவதிலும் கிட்டு பீரங்கிப் படையணி மிக மூர்க்கமானது என போரியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள்.

கேணல் நாகேஸ் மட்டக்களப்பைச் சேர்ந்த தளபதியாவார். நெருங்கிச் சென்று சுட்டுவீழ்த்தும் தந்திரம் எதிராளிகளை வேகமாக பின்வாங்கச்செய்யும் போர் வியூகமாகும் என போரியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள்.

அத்தகைய வியூகத்திற்கு பெயர்பெற்ற ஒரு மரபுவழி அணியாக விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணி விளங்கியது. ஜெயந்தன் படையணியின் தாக்குதல் தளபதியாக இருந்த கேணல் நாகேஸ், கருணா எனப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனின் பிரிவுக்குப் பின்னர் ஏராளமான கிழக்கு போராளிகளை கருணாவழி சிதறுண்டுபோகாமல் மீட்டெடுத்த பொறுப்பாளர்களில் ஒருவராக விளங்கினார்.

உடல் முழுவதும் போர்க்களச் சன்னங்களைச் சுமந்தாலும் ஆனந்தபுரம் ஊடாக முன்னேறி ஊடறுப்புச் செய்வேன் என்ற நம்பிக்கையில் தன்னால் வழிநடத்தப்பட்ட பல போராளிகளைக் களமிறக்கி நேரடியாகவே ஆனந்தபுரம் களத்தில் போராடியவர்.

இவர்கள் அனைவரும் போராட்டத்தின் முக்கியமான தூண்களாக இருந்து ஒரே நாளில் பலியெடுக்கப்பட்டமை ஈழப் போராட்ட காலக்கோட்டில் மிகப்பெரும் கறை படிந்த நாளாகப்போனது.

இவர்களின் இழப்புக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் போர்க்கள தன்னெழுச்சி என்பது அணைந்து போனதென்றே சொல்லமுடியும்!

-eelamnews.co.uk

TAGS: