இலங்கை தொடர்பிலான சர்வதேச விசாரணையை இந்தியா தடுத்து வருகிறது: அ.வரதராஜப்பெருமாள்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது என்று வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வரதராஜப்பெருமாள் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை தொடர்பான விடயம் ஜெனீவாவில் பேசப்படும் போது இந்தியாவின் நிலைப்பாடு 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்றே கூறி வருகின்றது.

இதனையே ஆராம்ப காலத்திலிருந்து கூறி வருகின்றது. இதற்கு அப்பால் ஏனைய விடயங்களில் இந்திய அரசு கவனம் செலுத்துவதில்லை.அதற்காக அவர்கள் தயாராகவும் இல்லை.தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பவில்லை.அதனை தடுக்கும் முயற்சிகளையே அவர்கள் செய்து வருகின்றனர்.

இந்திய அரசு தனது தேசிய பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டே செயற்படுகின்றது.தமிழ் மக்களின் நலனை பார்க்கவில்லை.இதனால் சர்வதேச விசாரணைக்கு இந்தியா எந்த விதத்திலும் உதவாது. மாறாக அதனை தடுப்பதில் மும்மரமாக பணியாற்றும் என்பதே உண்மை.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: