“பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வொன்றை வழங்காவிட்டால், தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழத் தயாரில்லை. அவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் இறைமைக்கு புத்துயிரளித்து அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காது இராணுவ ரீதியில் அதனை அடக்குவதற்கு முயற்சிப்பதன் ஊடாக எஞ்சிய 50 வீத தமிழ் மக்களையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறா? அரசாங்கம் கூறுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது வன்னிப் பிரதேசத்தில் மூன்றரை இலட்சத்துக்கும் 4 இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள் முடங்கிப்போயிருந்த நிலையில், அங்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரையிலேயே இருப்பதாக அரசாங்கம் கணிப்பிட்டிருந்தது. இது தொடர்பிலும், உயிரிழந்தவர்கள் தொடர்பிலும் ஏன் இதுவரை விசாரணைகள் நடத்தப்படவில்லை என்றும் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் எதிர்கால பொருளாதாரம் பல்வேறு விடயங்களில் தங்கியுள்ளது. ஒற்றுமை அதனை அடிப்படையாகக் கொண்ட பலம், உள்ளூரில் மற்றும் வெளிநாட்டில் பெற்றுக்கொள்ளும் அங்கீகாரம் என்பவற்றில் தங்கியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் இரண்டு சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்று அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு மற்றையது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சொந்த விசாரணை. இந்த இரு விசாரணைகளிலும் போர் குற்றங்கள் மற்றும் மனித நேயத்துக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் எந்தவொரு உள்ளக விசாரணைகளையும் நடத்தவில்லை என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ள விடயங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்றும் கூறியுள்ளது.
யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அப்போதைய ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வன்னிப் பிரதேசத்தில் குண்டுகள் வீசப்பட்டதுடன், வான்குண்டுகள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அது மாத்திரமன்றி மூன்றரை இலட்சம் முதல் நான்கு இலட்சம்பேர் வரை முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருந்தபோதும் அங்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரையில் இருப்பதாகக் கணிப்பிட்டே உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அரசாங்கம் அனுப்பியுள்ளது. அங்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டது.
இறுதியுத்த நேரத்தில் முல்லைத்தீவிலிருந்த 4 இலட்சம் பேரில் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்தால் எஞ்சியவர்களுக்கு என்ன நடந்தது? இது தொடர்பில் ஏன் இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை? முல்லைத்தீவிலிருந்த மக்கள் ஷெல் தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். அங்கு ஐ.நா முகவர் அமைப்புக்களோ அல்லது சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களோ அங்கிருக்கவில்லை. இறுதி யுத்தத்தின்போது வன்னியிலிருந்த மக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் ஏன் குறைத்து மதிப்பிட்டது? என்றும் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் இதனை எதிர்காலத்தில் எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது அரசாங்கத்துக்குத் தெரியாமல் உள்ளது. 1988ஆம் ஆண்டிலிருந்து புதிய அரசியலமைப்பை தயாரிப்பது குறித்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மங்கள முனசிங்க அறிக்கை, சந்திரிகா காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு தீர்வு யோசனை, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் அறிக்கை என பல அறிக்கைகள் இருக்கின்றபோதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு எம்மால் வரமுடியாமல் உள்ளது.
அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாட்டை எவ்வாறு தொடர்ந்தும் முன்கொண்டு செல்வது என அரசாங்கத்துக்குத் தெரியாமல் உள்ளது. எப்படி முடிவெடுப்பது எனத் தெரியாமல் உள்ளது.
பிரிக்கப்படாது ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வொன்றைக் காண்பதற்குத் தயார் என அறிவித்து அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான நிலையில் எமக்கு தீர்வொன்றை வழங்க நீங்கள் தயாரில்லை. தமிழர்கள் இரண்டாவது பிரஜைகளாக வாழ்வதற்கு விரும்பவில்லை.
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்காது இரண்டாவது பிரஜைகளாக வாழ்வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழர்களுக்கான இறைமையை புதுப்பித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com