இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் 75,416 குடும்பங்களைச் சேர்ந்த 3,21,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இலங்கையில் 12 மாவட்டங்கள் வறட்சியினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கேகாலை, புத்தளம், குருநாகல், வவுனியா, யாழ்ப்பாணம், மாத்தளை, கண்டி, மாத்தறை, கம்பஹா, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் இந்த வறட்சியுடனான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வறட்சியுடனான காலநிலையினால் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9,882 குடும்பங்களைச் சேர்ந்த 35,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
அதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை சேர்ந்த 10,110 குடும்பங்களைச் சேர்ந்த 33,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2100-ல் இமயமலை பனிமலைகளில் மூன்றில் ஒரு பங்கு இருக்காது
- பொழியும் மழை, உருகும் பனி – உயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் புவி
மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 7,750 குடும்பங்களைச் சேர்ந்த 27,081 பேர் இந்த வறட்சியுடனான காலநிலையை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இடர் முகாமைத்துவ நிலையம் பவுசர்கள் மூலம் நீரை விநியோகித்து வருவதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இலங்கைக்கு மேலாக சூரியன் கடந்த ஐந்தாம் திகதி முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை உச்சம் கொடுத்துள்ளமையினால், நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
சில பகுதிகளில் 37 பாகை செல்ஸியஸ் வெப்ப நிலை நிலவி வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த காலப் பகுதியில் இயன்றளவு நீரை அருந்துமாறு சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், சூரிய வெப்பத்தில் நடமாடுவதனை இயன்றவு தவிர்த்துக் கொள்வது சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்ந்தும் நிலவுகின்றமையினால், தோல் நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகளும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
இதேவேளை, இலங்கையிலுள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.
இவ்வாறு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால், நீர் மின் உற்பத்தியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் தற்போது தொடர்ந்து மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மின்வெட்டு காரணமாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
விக்டோரியா, மவுசாகலை, கொத்மலை, மேல் கொத்மலை, குகுலேகல, ரந்தனிகல, சமனலவெவ, காசல்ரீ, நோர்டன், லக்ஷபான, ரன்தம்பே, கெனியன், போவத்தன்ன மற்றும் உக்குவல ஆகிய நீர்மின் உற்பத்தி இடம்பெறும் எந்தவொரு இடத்திலும் மழை வீழ்ச்சி சற்றேனும் பதிவாகவில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.
இதன்படி, இலங்கையில் தற்போது 10 வீத மின்சார உற்பத்தியே இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்த நிலையில், நாட்டில் தொடர்ந்தும் சூழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சூழற்சி முறையிலான மின்வெட்டை ரத்து செய்து, தொடர்ந்து மக்களுக்கு மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், அவசர தேவைக்கான மின்சாரம், எரிப்பொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்தி, மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
மேலும், சில பகுதிகளில் நீர் வெட்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். இதனால் தமது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலையினால் வனப் பகுதிகளில் காட்டுத் தீ வெகுவாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வன வளங்கள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், வன விலங்குகளும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர். -BBC_Tamil