எது தீர்வு?

இலங்கையில் தீர்க்கப்பட வேண்டியதோர் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை, சில வில்லங்கத் தனமான அரசியல் செய்வோரைத் தவிர, மற்றைய அனைவரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள்.

குறைந்த பட்சம், இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களிடையே இன முரண்பாடுள்ளது என்பதையும் அது தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள்.

ஆனால், அந்தப் பிரச்சினை தொடர்பான வரையறைகள் தொடர்பிலும், தீர்வுக்கான அடிப்படைகள் தொடர்பிலும், அனைத்துத் தரப்பினரிடையேயும் தரப்பினுள்ளேயும் நிறைந்த கருத்து நிலைப்பாட்டு வேறுபாடுகள் உள்ளன.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் பேரனும், தமிழ்த் தேசியத்துக்காகச் சர்வதேசமெங்கும் குரல்கொடுத்த குமார் பொன்னம்பலத்தின் மகனும், தீவிரத் தமிழ்த் தேசியவாதிகள் என்று பொதுவாகச் சுட்டி நோக்கப்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அண்மையில் அரசியல் மாநாடொன்றில் உரையாற்றியபோது, ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பில், பின்வரும் கருத்தை வௌிப்படுத்தி இருந்தார்.

“போர் முடிவடைந்ததற்குப் பிற்பாடு, தமிழ்த் தேசம் தன்னுடைய இருப்புக்காகக் போராடிக் கொண்டிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து, கடந்த ஒன்பது வருடங்களாகத் தமிழ்த் தேசத்தினுடைய இருப்பை, இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் முதலிலே, தமிழர் ஒரு தேசமாக இருப்பதைக் கைவிட வேண்டுமென்பது தான், அவர்களுடைய முக்கியமான குறிக்கோள். தமிழர் தொடர்ந்தும் ஒரு தேசமாகச் சிந்திக்கின்ற வரைக்கும், எங்களுக்கென்று தனித்துவம் பேசும் இனமாக, நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். தமிழ் மக்களை ஏமாற்றி, இன்னுமொருமுறை ஒற்றையாட்சி அரசமைப்பை எம்மீது திணிப்பதற்கும் கடந்த முறைகளை விட, இந்த முறை வித்தியாசமாகத் தமிழ் மக்களுடைய முழுமையான ஆதரவோடு, அந்த ஒற்றையாட்சியை நாலாவது முறையாக, நிறைவேற்றுவதற்கு முடிவெடுத்து இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம். கடந்த 70 வருடங்களாக, மூன்று அரசமைப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.அந்த மூன்றும், ஒற்றையாட்சி அரசமைப்பாகத் தான் அமைந்திருந்தன. அவற்றைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருந்தார்கள்.ஆனால், இந்தமுறை எம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், தமிழ்ச் சரித்திரத்திலேயே முதற்தடவையாக அதே ஒற்றையாட்சி அரசமைப்பை, நாம் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றார்கள். கடந்த மூன்று அரசமைப்பையும் ஒற்றையாட்சி அரசமைப்பாக நிறைவேற்றிய காரணத்தாலேயே தமிழ்த் தரப்புகள் நிராகரித்தன.ஆனால், இந்த நான்காவது ஒற்றையாட்சி அரசமைப்பை ஆதரிக்கிறதற்கான முயற்சிகளை, எம்மவர்களாலே மேற்கொள்ளப்படுகின்றது. மூன்று முறை நிராகரித்து, நான்காவது முறை நாங்களாகவே விரும்பி அதை ஆதரித்தால், அதற்குப் பிற்பாடு, நாட்டில் இனப்பிரச்சினை இருக்கிறதென்ற பேச்சுக்கே இடமிருக்காது. இதுதான் இன்றைக்கு இருக்கக் கூடிய ஆபத்து. அந்த நிலையிலேயே வரப்போகின்ற புதிய அரசமைப்புக்கான முயற்சியைத் தமிழ்த் தேசம் ஒருமித்து, அதனை முழுமையாக அடியோடு நிராகரிக்க வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள், தங்கள் உயிரைத் தியாகம் செய்தது, எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. அந்த உயிர்கள் வீண்போக முடியாது. ஆகவே, அந்த ஒற்றையாட்சி அரசமைப்பை நிராகரிக்க வேண்டுமென்பது தான் எங்கள் கடமை. அதுதான் எமக்கிருக்கும் பிரதான கடமை” என்று அவர் அறுதியாகக் கருத்துரைத்திருந்தார்.

மறுபுறத்தில், 2018 டிசம்பர் 12ஆம் திகதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றபின் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்; அத்துடன் புதிய அரசமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில், ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து 2018 டிசம்பர் 18ஆம் திகதி, காலிமுகத்திடலில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவர், “ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில், இந்த நாட்டில் நல்லிணக்கம், அரசியல் தீர்வு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும் ஒற்றையாட்சியின் கீழ் தான் ஏற்படுத்துவோம். அதிலிருந்து விலகவும் மாட்டோம்” என்று மீள வலியுறுத்தியிருந்தார்.
2018 ஒக்டோபர் 31ஆம் திகதி, சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, “நான் இருக்கும் வரை, வடக்கு-கிழக்கை இணைக்க விட மாட்டேன்; சமஷ்டித் தீர்வையும் அளிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டதாக, பல்வேறு செய்திச் சேவைகளும் அறிக்கையிட்டிருந்தன.
மேலும் கடந்தவாரம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், “பிரிக்கப்படாது ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வொன்றைக் காண்பதற்குத் தயார் என அறிவித்து, அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான நிலையில் எமக்குத் தீர்வொன்றை வழங்க நீங்கள் தயாரில்லை. தமிழர்கள் இரண்டாவது பிரஜைகளாக வாழ்வதற்கு விரும்பவில்லை. தேசிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்காது, இரண்டாவது பிரஜைகளாக வாழ்வேண்டிய நிலை ஏற்பட்டால், தமிழர்களுக்கான இறைமையைப் புதுப்பித்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று உரையாற்றியிருந்தார்.

2009இலேயே, “இலங்கையில் சமஷ்டித் தீர்வுக்கு இடமில்லை” என, மிகவும் திட்டவட்டமாக, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்திருந்தார். அந்த நிலைப்பாடு, மேலும் தீவிரமாகியுள்ளதேயன்றி, இன்று வரை மாறியதற்கான அறிகுறிகள் இல்லை.
ஆகவே வேறுபட்ட அரசியல் முகாமைச் சேர்ந்தவர்கள் பலரும், இனப்பிரச்சினை விவகாரத்திலும், அதற்கான தீர்வு தொடர்பிலும் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதை, நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதில் தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில், இந்த எதிரிடையான அரசியல் முகாம்களை, தீவிரத் தமிழ்த் தேசியவாத முகாம் என்றும், மிதவாத தமிழ்த் தேசியவாத முகாம் என்றும் அடையாளப்படுத்தலாம்.

மறுபுறத்தில், சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் முகாமைப் பொறுத்தவரையில், அடிப்படையில் பிரிபடாத ஒற்றையாட்சிக்குள் (அதாவது சமஷ்டியோ, தனிநாடோ) தீர்வு என்பதில் அனைத்துத் தரப்பும் ஒன்றித்து நிற்பதை அவதானிக்கலாம். அவர்களிடையேயான வேறுபாடென்பது, பிரிபடாத ஒற்றையாட்சிக்குள் என்ன அளவிலான அதிகாரப் பகிர்வு என்பதில் இருக்கலாமேயன்றி, அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை.

இந்தத் தீவிரத் தமிழ்த் தேசியவாதம் என்று அடையாளம் காணப்படுவோரின் ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்பெற முடியாது என்ற நிலைப்பாடானது, மிதவாதத் தமிழ்த் தேசியவாதிகள் என்று அடையாளம் காணப்படுவோரின் சமகாலத்தில் எழுந்துள்ள இணக்க அல்லது யதார்த்த அரசியல் எனும், சமரச அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரிடையாகவும், ஒற்றையாட்சிக்குள்தான் எந்தத் தீர்வும் என்கிற சிங்கள-பௌத்த பெரும்பான்மை அரசியலின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகவும் பார்க்கப்பட வேண்டும்.

இந்தக் கருத்தியல் நிலைப்பாட்டு முரண்பாடானது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஏற்றதொரு தீர்வைக் காண்பதிலுள்ள அடிப்படைப் பிரச்சினைகளில் முதன்மையானதாகும்.

ஆனால், இந்த ஒற்றையாட்சி பற்றிய தேடலுக்கு முன்பதாக, நாம் மிக அடிப்படையானதொரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ளுதல் அவசியம். இந்தத் தொடரினூடாக, சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றினூடாக, நாம் அடையாளம் கண்டுகொண்டதன் படி, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் என்பது, இரத்தினச் சுருக்கமாகத் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற மூன்றும் எனலாம்.

இவை இலட்சியப் பொருட்கள். ஆகவே ஒற்றையாட்சியோ, சமஷ்டியாட்சியோ, தனிநாடோ என்பதெல்லாம் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் அல்ல; மாறாக, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான பல்வேறுபட்ட வழிமுறைகளில் அவையும் உள்ளடங்கும்.

ஆனால், அரசியல் முன்னரங்கில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகள் பற்றிய கலந்துரையாடல் வெறும் ஒற்றையாட்சி, சமஷ்டி, தனிநாடு என்ற அடையாளக் கருத்தியல்களுள் அடக்கப்பட்டுவிடுவதானது, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கு, ஏதுவான புத்தாக்க வழிமுறைகளுக்கான கதவை அடைத்துவிடுவதாகவே அமைந்துவிடும் என்ற கவலையும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டியதாகிறது.

அது என்ன, புத்தாக்க வழிமுறை என்ற கேள்வி, இங்கு எழலாம். ஒற்றையாட்சி, சமஷ்டி, தனிநாடு என்ற கருத்தியல்கள், பொதுவாக நாம் கருதுவது போல, மிக எளிமையானதும், ஸ்தூலமானதும், ஸ்திரமானதுமான பொருளுடையவையல்ல.

அரசியல் வரலாற்றில், சமஷ்டி என்பதே, ஓர் அதிகாரப் பகிர்வுப் புத்தாக்க முயற்சியின் குழந்தைதான். மனிதக் கூட்டங்கள், தமது தேவைக்கேற்றபடி தம்மைத் தாம் ஆளும் கட்டமைப்புகளையும் காலத்துக்குக் காலம் வடிவமைத்து வந்துள்ளன.

இன்று சமஷ்டியாட்சி நாடுகள் என்று பட்டியலிட்டு நாம் நோக்கினாலும், அதில் அனைத்து சமஷ்டியும் ஒரே மாதிரியானதல்ல என்பதை நாம் தெட்டத் தௌிவாக நோக்கலாம். அதேபோல், ஒற்றையாட்சி நாடுகள் என்ற பட்டியலை நோக்கினாலும், அதில் சில ஒற்றையாட்சி நாடுகளில், சில சமஷ்டியாட்சி நாடுகளைவிடப் பிராந்தியங்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதிகளவிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.

ஆகவே, ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற சொற்கள் மாத்திரம் ஓர் அரசின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளப் போதுமானவையல்ல. ஆனால் அதற்காக இந்தச் சொற்களால் பயனில்லை என்றும், முற்று முழுதாகச் சொற்களின் அடையாள வலுவை நிராகரித்து விடவும் முடியாது.

ஒற்றையாட்சி, சமஷ்டி ஆகியவற்றுக்கு இடையான வேறுபாடு பற்றி, சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்பில் கருத்துரைத்த பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப், “அரசுகள் ஒற்றையாட்சி, சமஷ்டியாட்சி என்று பெயரிடுதலானது சிலவேளைகளில் தவறானதாக அமைந்துவிடும். சமஷ்டியரசின் தன்மைகளையும் அம்சங்களையும் கொண்ட ஒற்றையாட்சி அரசுகள் இருக்கலாம்; அதுபோல் மாறியும் அமையலாம். ஒற்றையாட்சி அரசுக்கு உள்ளான அலகுகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதனை சமஷ்டி என்று கருத முடியும்; அதுபோலவே சமஷ்டி அரசில் மத்தி பலம் வாய்ந்ததாகவும், மத்தியில் பலம் குவிக்கப்பட்டுமிருந்தால், அதனை ஒற்றையாட்சி அரசாகக் கருதலாம். ஆகவே, இறைமையைக் பகிர்தல், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்பவை ஒற்றையாட்சி அரசுக்குள், சமஷ்டி முறை அரசாங்கத்தை ஸ்தாபிக்க வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற பெயர் எல்லைகளைத்தாண்டிய தீர்வொன்றைக் காண்பதற்கு, இந்தத் தீர்ப்பில் ஒரு பிள்ளையார் சுழி காணப்படுகிறது.

இது தமிழ் மக்களுக்கு சாதகமாகவும் அமையலாம். அல்லது சிங்கள-பௌத்த தலைமைகள் சாணக்கியமாக நடந்துகொண்டால், இது தமிழ் மக்களுக்குப் பாதகமாகவும் அமையலாம்.

-tamilmirror.lk

TAGS: