வடக்கில் இந்து மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வட. மாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் அதனை எவ்வாறு இல்லாமற்செய்து வடக்கில் இனங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்ப முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தினை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு ஆலய நிர்வாக சபையினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் சில நாட்களில் ஆலய நிர்வாகத்தினரையும் பிரதம குருக்களையும் சந்திக்கவிருப்பதாகவும், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வட. மாகாணத்தில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்து மாநாடு ஒன்றினை நடத்துவது குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாகவும் மிகவிரைவில் வடக்கில் இந்து மாநாடொன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, ஆளுநர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மக்களுக்கு ஆக்கபூர்வமாக காணப்படுவதனை தான் உணர்ந்துள்ளதாக குறிப்பிட்ட நல்லை ஆதீன பிரதம குருக்கள், மக்களுக்கான இந்த பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
-eelamnews.co.uk

























