கோட்டாவின் உத்தரவின் அடிப்படையிலேயே சித்திரவதைகள் இடம்பெற்றன ! யஸ்மின் சூக்கா தெரிவிப்பு

சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு செய்தமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும்போதே யஸ்மின் சூக்கா இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் வழக்கினை தாக்கல் செய்த ரோய் சமாதானம் மற்றும் பிரபல சட்டத்தரணி ஸ்கொட் கிள்மரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது தற்போது நாம் வழக்கு தொடர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக காணப்படுகின்றது.

ஏனென்றால் சித்திரவதை செய்வதற்கான உத்தரவு மற்றும் கட்டளைகள் அனைத்தும் கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு கோட்டாபய சட்டபூர்வமாக பொறுப்புகொண்டவர்.

பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டிருந்ததாக பல ஆண்டுகளாக கோட்டாபய தனது பகிரங்க அறிக்கைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த சம்பவங்கள் ஐ.நா. சபையினால் ஆவணப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டதுடன் இலங்கை அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டது.

பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் இந்த முறைகேடுகள் நடைபெற்றதா அல்லது சரியான முறையிலேயே செயற்பட்டார்களா என நன்கு அறிந்திருந்தார். ஆனால் அவர் குற்றவாளிகளை விசாரணை செய்ய அல்லது தண்டிக்க சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எனவே தற்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் தருணத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: