நடந்த ஈழப்போரில் ஸ்ரீலங்கா இராணுவம் செய்த கொடூர போர்க்குற்றம்; வெளியான புதிய புகைப்படம்!

தமிழர் தாயகத்தில் நடந்த இறுதி யுத்தம் எண்ணற்ற கொடுந்துயரை ஏற்படுத்திச் சென்ற கனத்த கணங்கள் ஒவ்வொன்றும் ஆறாத வடுக்களாக யுகம் கடந்தும் நிலைத்திருக்கும்.

அந்த வகையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த நெஞ்சுவெடிக்கும் துயர் சுமந்த அனுபவங்களை பலரும் அவ்வப்போது பகிர்ந்துவருகின்றனர். போரின்போது யுத்த வலயத்தில் இருந்த ஈழநாதம் பத்திரிகையின் ஊடகவியலாளரான சுரேன் கார்த்திகேசு, தாய் தன் பிள்ளயை அணைத்தபடி உயிரிழந்துகிடக்கும் காட்சியினைப் படமாக்கி முகநூலில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தொடர்பில் அவர் கூறியுள்ள விடயங்களினை இங்கு தருகின்றோம்…

”2009 பெப்ரவரி மாத முற்பகுதி, உடையார்கட்டு முன்பள்ளி ஒன்றிலே ஈழநாதம் இயங்கி வந்திருந்தது. நானும் ஜெகனும் வள்ளிபுனத்தில் அமைந்திருந்த குருகுலம் சிறுவர் இல்லத்திற்கு எங்களுக்கான மதியம், இரவு உணவு எடுப்பதற்கு சென்று வருவது வழமை.

தற்காலிகமாக எங்களுக்கு குருகுலத்தில் இருந்தே சாப்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது, சுதந்திரபுரம் சந்திக்கும் வள்ளிபுனம் காளிகோவிலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அடிக்கடி குறுந்தூர எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும். இந்த வீதியினை அதிகம் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படும். இரவு என்றால் உந்துருளியின் ஒளிபாய்ச்சியினை நிறுத்திவிட்டு தான் அவ்விடத்தில் செல்ல வேண்டும். இல்லையென்றால் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும்.

 

இந்தப்புகைப்படத்தில் இருக்கும் தாயும் பிள்ளையும் எறிகணைத்தாக்குதலில் வீதியிலேயே கொல்லப்பட்டிருந்தனர். இரண்டு நாட்களாக உடல்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. அவ்வுடல்களை தூக்க முடியாத அளவிற்கு பழுதடைந்துவிட்டன. “நாங்கள் அதிலேயே வைத்து எரித்து விடுவோம்” என்று ஜெகன் தான் சொன்னான். வேறு வழியில்லாமல் அவ்வுடல்களை அவ்விடத்திலேயே எரிப்பது என்றே முடிவெடுத்தோம்.

உந்துருளியினை இயங்குநிலையிலேயே வீதியோரத்தில் நிறுத்தி வைத்து விட்டு அவ்வுடல்களை எரிப்பதற்கு தயார் செய்தோம். அந்த வீதியால் சென்ற அண்ணை ஒருவரும் எங்களோடு நின்று எரிப்பதற்கு உதவி செய்திருந்தார். அப்புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறேன். தாய் தன் பிள்ளையை அணைத்தபடியே இறந்துகிடந்தமை கண்ணுக்குள்ள நிற்கிறது.” என குறிப்பிட்டிருக்கிறார்.

-athirvu.in

TAGS: