ஜேர்மனியில் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மீது போர்க்குற்ற வழக்கு

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியின் அரசாங்க சட்டவாளர்கள் நேற்று போர்க்குற்ற வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக ‘ஏபி’ செய்தி வெளியிட்டுள்ளது.

37 வயதுடைய, சிவதீபன் என்பவருக்கு எதிராகவே, 15 சிறிலங்கா அரசாங்கப் படையினரைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அவருக்கு எதிராக இரண்டு மனிதப் படுகொலை வழக்குகளும், 11 மனிதப் படுகொலை முயற்சி வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் தனிநபர் இரகசியம் பற்றிய சட்ட விதிகளுக்கு அமைவாக, சந்தேக நபரின் முதற்பெயர் வெளியிடப்படவில்லை.

இவர் கடந்த ஓகஸ்ட் மாதம் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு, சந்தேகநபர், கைது செய்யப்பட்ட 15 சிறிலங்கா படையினருக்கு பாதுகாப்பு வழங்கி, ஓரிடத்துக்கு கொண்டு சென்றார் என்றும், அங்கு அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் அவர்களின் சடலங்களை எரிப்பதற்கும் அவர் உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

பின்னர் ஒரு ஆண்டு கழித்து, மற்றொரு சம்பவத்தில் 13 சிறிலங்கா படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் அவர்களில் இருவர் கொல்லப்பட்டனர் என்றும், சந்தேக நபருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

-puthinappalakai.net

TAGS: