“எமது மக்களின் சொந்த நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க முடியாது. அந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும். எமது நிலம் எமக்கே வேண்டும். இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதான கோரிக்கை. இந்தக் கோரிக்கையை அரசாங்கமும் இராணுவமும் உதாசீனம் செய்ய முடியாது. எனவே, வீராப்பு வசனங்களை நிறுத்திவிட்டு எமது மக்களின் கோரிக்கையை அரசாங்கமும் இராணுவமும் நிறைவேற்ற வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.
“தேசிய பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாட்டுக் காரணங்களால், முப்படைகள் மற்றும் பொலிஸாரைத் தமது இடங்களில் இருந்து ஏனைய இடங்களுக்குச் செல்லுமாறு கேட்க முடியாது. இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் உணருவார்களேயானால், அரசு சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முடிவுக்கு வரும். அவ்வாறான நபர்கள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே இந்தப் பிரச்சினைக்கு ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கும்” எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியிருந்தார்.
அதேவேளை, “வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது. அரசு கூறினாலும் இதை நாம் செய்யவே மாட்டோம்” என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்திருந்தார்.
அரசு மற்றும் இராணுவத்தின் இந்தக் கருத்துக்கள் தொடர்பாக பதிலளித்துள்ள இரா.சம்பந்தன், “எமது மக்களை அவர்களின் சொந்த நிலத்தில்தான் வாழ வேண்டும். படையினரின் வசதிக்காக அவர்களை வெளியிடங்களுக்கு மாற்றவே முடியாது. இதற்கு ஒருபோதும் எமது மக்கள் இடமளிக்கமாட்டார்கள். தமது நிலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் சொல்லணாத் துயரங்களை எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கில் மக்களின் பல காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு மக்கள் நீண்டகாலமாக ஜனநாயக வழியில் போராடி வருகின்றனர். அதேவேளை, வடக்கு – கிழக்கில் சில பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே, மக்களின் நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும். மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவையே இல்லை.”என்றுள்ளார்.
-4tamilmedia.com