கொழும்பு: இலங்கையில் 172 பேர் வரை பலியாக காரணமாக இருந்த தொடர் குண்டுவெடிப்பு பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இருக்கலாம் என்று இலங்கை பாதுகாப்புத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் திருநாள் என்பதால், இலங்கையில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை, நீர் கொழும்பு, கட்டுவப்பிட்டியா ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் அவர்கள் வழிபாடு நடத்தினர்.
அப்போது கொச்சிக்கடை தேவாலயத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. அதில் கட்டிட மேற்கூரை, தேவாலயத்தினுள் இருக்கும் மேசைகள் என அனைத்தும் சேதமடைந்தன. உள்ளே இருந்த நூற்றுக்கணக்கானோர் பீதியில் அலறினர்.
ரத்தம் வழிய அலறிய மக்கள்
பலர் ரத்தம் சொட்ட சொட்ட அச்சத்தில் தேவாலயத்தை விட்டு வெளியே ஓடினர். என்ன நடக்கிறது என்றே சில நிமிடங்களில் யாருக்கும் புரியவில்லை. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
30 நிமிடத்தில் தாக்குதல்
இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த 30 நிமிடங்களில் நீர் கொழும்பு, கட்டுவபிட்டியா ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. நடைபெற்றது. தலைநகர் கொழும்பில் உள்ள இரு தங்கும் விடுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.
மட்டக்களப்பில் தாக்குதல்
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மட்டக்களப்பில் உள்ள அந்தோணியார் தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. மொத்தமாக 6 இடங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல்களில் 172 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை உயருகிறது
400க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப் படுகிறது.
ஐஎஸ்ஐஎஸ் பின்னணி?
இந்த கொடூர தாக்குதல்களில் 6 டன் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என இலங்கை பாதுகாப்புத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்த போதிலும் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கமாக இருக்கலாம் என்று இலங்கை சந்தேகம் தெரிவித்துள்ளது.
5 அடுக்கு பாதுகாப்பு
அதே நேரத்தில் ஓட்டல்களில் நடைபெற்றது தற்கொலைப்படை தாக்குதலாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகி உள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை கூறியிருக்கிறது. தொடர் குண்டுவெடிப்பால் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.