விடுதலைப் புலிகளுடன் தமிழர்கள் இணைய, சிங்கள அரசியல்வாதிகளே காரணம் – ரிசாத் பதியூதீன்

சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன், ஒப்பிடுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தது என வினவியபோதே அமைச்சர் ரிசாத் பதியூதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார்.

ரிசாத் பதியூதீன்

இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தவில்லை என கூறிய அமைச்சர், அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்திவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் லாபத்தை பெற்றுக்கொள்ளவே எனவும் ரிசாத் பதியூதீன் குறிப்பிட்டார்.

தமது சுயலாப அரசியலுக்காக இந்த பயங்கரவாத தாக்குதலை வேறொரு திசையை நோக்கி கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாக்குதலுககு உள்ளான தேவாலயம்

சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் மொழியை தடை செய்ததாகவும், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும், தமிழர்களின் உரிமைகளை பறித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாகியதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.

இலங்கை
இலங்கை

தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பங்குதாரர்களாக்கிய துரோகத்தை சிங்கள அரசியல்வாதிகளே மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு என கூறிய அமைச்சர் ரிசாத் பதியூதீன், இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: