இலங்கையில் கிறிஸ்தவ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இன்றைய ஜும்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசல்களின் முன்னால் ஒன்று கூடிய முஸ்லிம்கள்; ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்தும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி கண்டனங்களை வெளியிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபங்களையும் இதன்போது தெரிவித்தனர்.
இதேவேளை, மேற்படி பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் பிரகடனங்களையும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வெளியிட்டனர்
அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, அப்பிரதேச ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல். ஹைதர் அலி ஊடகங்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையில்;
“நடைபெற்ற தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு ஒருபோதும் நாம் துணை நின்றதில்லை. மலையகத்தைச் சேர்ந்த ஏனைய சமூக மக்கள் – மண் சரிவால் பாதிக்கப்பட்ட போது, எமது பிரதேசத்திலிருந்து நிவாரணங்களைச் சேகரித்து, அந்த மக்களுக்காக வழங்கியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மற்றைய சமூக மக்களுக்கும் எங்களுக்குமான உறவு இவ்வாறுதான் இருந்தது” என்றார்.
- “இலங்கை குண்டுதாரிகள் இந்தியாவில் பயணம் செய்துள்ளனர்” – ராணுவ தளபதி
- “முஸ்லிம்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்”: மனோ கணேசன் கோரிக்கை
இதனையடுத்து, தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில், பிரகடனமொன்றினையும், அவர்கள் அங்கு வெளியிட்டனர்.
“முஸ்லிம் பெயர் தாங்கிய சிலரால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமானதும், மிருகத்தனமானதுமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்து, தீவிரவாதத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் மக்கள் மீது திணிப்பதை இஸ்லாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றோம்”. “பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அவர்களின் துக்கத்திலும் பங்கு கொள்கிறோம்”.
“நாம் எல்லோரும் இலங்கையர்கள் எனும் அடிப்படையில் நமது நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்” என்பவை உள்ளிட்ட பல விடயங்களை, அந்தப் பிரகடனத்தின் போது, அவர்கள் கூறினர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்திலும் இதுபோன்ற கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் முன்னிலையில் ஒன்று திரண்ட நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள், நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்கும் பதாதைகளை ஏந்திய வண்ணம், தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அண்மைய தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் இஸ்லாமிய சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர், ஊடகங்கள் முன்னிலையில் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இவ்வாறான கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil