தேசிய தவ்ஹீத் அமைப்பின் மற்றுமோர் பயிற்சி முகாம் இதுதான்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த 21 ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் உட்பட 38 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் இன்றைய தினம் சுற்றி வளைத்துள்ளனர்.

அம்பாறை கல்முனை சாய்ந்தமருது பிரதேத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதனையடுத்து, அவர் தெரிவித்த வாக்குமூல அடிப்படையிலேயே மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. சஹ்ரான் உட்பட 38 பேர் வரையில் ரி 56 ரக துப்பாக்கியை மீள் பொருத்தும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், கடந்த 21 ம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ம் திகதி தாக்குதலுகான இறுதி பயிற்சி சஹ்ரான் தலைமையில் இந்த கட்டிடத்திலே மேற்கொண்டுள்ளதுடன், குறுகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடம் குத்கைக்கு பெற்றுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சுற்றிவளைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்த நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்த நுவரெலியா பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பீ.பி.சுகதபால, நுவரெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தன பஸ்நாயக்க, இராணுவத்தின் பிரதானி அசித்த ரணதிலக்க ஆகியோரின் தலைமையின் கீழான குழு மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

-athirvu.in

TAGS: