இலங்கையில் தொடரும் பதற்றம்; நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புக்களும் கைதுகளும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறன.

நேற்றைய தினமும் சட்ட விரோத ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் என்பனவற்றுடன் சிலர் கைது செய்யப்பட்டனர்.

பெலவத்தை பிரதேசத்தில் வைத்து 5 வோக்கிடோக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சிலர் வழங்கிய தகவலுக்கு அமையவே அவை மீட்கப்பட்டுள்ளன.

பெலவத்தை சீனி தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் உதவி பணிப்பாளர் ஒருவர் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் அடிப்படைவாதத்தை பரப்பும் ஊடகம் ஒன்றுடன் தொடர்பு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்த மடிக்கணனி மற்றும் கடிதங்கள் என்பன குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி – பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் காவற்துறையினரும் படையினரும் இணைந்து, நேற்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே அவை மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

-athirvu.in

TAGS: