இலங்கை தற்போது பாதுகாப்பாக உள்ளது – ராணுவம், போலீஸ் அறிவிப்பு!

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர். நாடு தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று இலங்கை ராணுவமும், போலீசும் அறிவித்துள்ளன.

இலங்கையில் கடந்த மாதம் 21-ந்தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதுகுறித்து இடைக்கால போலீஸ் ஐ.ஜி. சந்தான விக்ரமரத்னே கூறியதாவது:-

3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் நடந்த குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்களான 2 பேர், போலீசுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டு விட்டனர்.

ஆகவே, இலங்கை தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று போலீஸ் மகிழ்ச்சியாக அறிவிக்கிறது. ஊரடங்கு உத்தரவும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இயல்பு நிலை திரும்பி வருகிறது.

உறுதி செய்யப்படாத தகவல்களை நம்பி குழப்பம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் பொய் தகவல்கள்தான் பீதிக்கு காரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகே கூறியதாவது:-

தேச பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் இயல்புநிலை திரும்பி வருகிறது. பொய் செய்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம். மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, 9 பெண்கள் உள்பட 73 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் செய்தித்தொடர்பாளர் ருவன் குணசேகரா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

கைதானவர்கள், சி.ஐ.டி. மற்றும் பயங்கரவாத புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய 14 கோடி ரூபாய் இலங்கை பணத்தையும், 700 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் சி.ஐ.டி. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

-athirvu.in

TAGS: