இலங்கை இஸ்லாமியர்கள்: அமைதியை நோக்கி செல்லும் புதிய பயணம்

(இலங்கையில் உயிர்ப்பு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வட – கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களிடம் இம்மாதிரியான செயல்கள் எவ்விதமான எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கின்றன, கடும்போக்குவாத எழுச்சியை முன்கூட்டியே கண்டிக்கத் தவறிவிட்டதா இந்தச் சமூகம் என்பது குறித்து விவரிக்கும் கட்டுரைத் தொடரின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதி இது. )

2017 மார்ச் பத்தாம் தேதி. காத்தான்குடியின் அலியார் சந்திப்பில் உள்ள அப்துல் ரவூஃபின் பதுரியா ஜும்மா மசூதி. ‘கடவுளுக்கு உருவமுண்டு’, ‘அல்லாவும் முஹம்மது நபியும் ஒருவரே’ போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து விவாதிக்க வருமாறு கோரிய, ஷஹ்ரான் மிகப் பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால், அந்தக் கூட்டம் வன்முறையில் முடிவடைந்தது. அப்துல் ரவூஃபின் ஆட்களும் ஷஹ்ரானின் ஆட்களும் அடித்துக்கொண்டார்கள்; வாள் வீச்சும் நடந்தது. ஷஹ்ரான் தனது கூட்டத்திற்கு கத்தி, பெட்ரோல் குண்டுகளுடன் ஆட்களை வரவழைத்தார் என அப்துல் ரவூஃப் குற்றம் சாட்டினார்.

காவல்துறை மொத்தம் 9 பேரை கைதுசெய்தது. இதில் ஷஹ்ரானின் தந்தை காசிமியும் சகோதரன் ஜைனியும் அடக்கம். இவர்கள் ஏழு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஷஹ்ரான் நேரடியாக சம்பந்தப்பட்டதாக பதிவான முதல் வன்முறை நிகழ்வு இதுதான்.

இதற்குப் பிறகு ஷஹ்ரானும் அவருடைய சகோதரர் ரில்வானும் தலைமறைவானார்கள். இதற்குப் பிறகு, ஷஹ்ரான் என்ன ஆனார், எங்கே போனார் என்பது குறித்த தகவல்கள் பெரிதாக யாரிடமும் இல்லை. இந்த காலகட்டத்தில்தான் ஷஹ்ரானும் அவரைப் பின்பற்றுபவர்களும் ஐஎஸ்ஐஸ் பாணி இஸ்லாத்தை நோக்கி நகர்ந்ததாக நம்பப்படுகிறது.

ஆனால், 2017ஆம் ஆண்டின் மோதல் சம்பவத்திற்கு முன்பாகவே, 13 இஸ்லாமிய அமைப்பினர் இணைந்து அரசிடமும் ஜனாதிபதியிடமும் ஷஹ்ரானின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், அவரது அமைப்பின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் குறித்து புகார்களைத் தெரிவித்தனர். அந்த காலகட்டத்தில், யூ டியூபில் ஷஹ்ரான் வெளியிட்ட பல வீடியோக்களில், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமெனக் கூறிவந்தார் அவர்.

மோதல் சம்பவத்திற்குப் பிறகு, தேசிய தௌஹீத் ஜாமத்திலிருந்து ஷஹ்ரான் நீக்கப்பட்டார். ஏழு மாதங்கள் சிறையிலிருந்துவிட்டுவந்த ஜைனிதான் இதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். ஆனால், பிறகு அவருமே தன் கடுமையான முகத்தைக் காட்ட ஆரம்பித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவரும் தேசிய தௌஹீத் ஜமாத்திலிருந்து ராஜினாமா செய்யவைக்கப்பட்டார்.

இலங்கையில் புதிய போக்கை நோக்கி செல்லும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை

இதற்குப் பிறகுதான் இவர்கள் முழுமையாக தலைமறைவானார்கள். ஆனால், கிழக்கிலங்கை இஸ்லாமியர்கள் மத்தியில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு ஷஹ்ரானும் அவரது கூட்டாளிகளும் மட்டுமே முழுக் காரணமல்ல.

இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, இலங்கை வாழ் இஸ்லாமிய அறிஞர்களின் தலைமை அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு ஃப்த்வாவை வெளியிட்டது.

2009ல் வெளியிட்ட அந்த ஃப்த்வா “சில மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஓரு பெண் தனது முகத்தையும் இரு கைகளின் மணிக்கட்டுகளையும் தவிர உடலின் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்கவேண்டும். முகத்தையும் கைகளின் மணிக்கட்டுகளையும் திறப்பதற்கு அனுமதியுண்டு. எனினும், ஒழுக்கச் சீர்கேடுகள் மலிந்து காணப்படும் தற்காலத்தில் பெண்கள் தமது அழகின் அடிப்படையாக இருக்கும் முகத்தை வெளிக்காட்டுவதனால் பிற ஆண்களினால் கவரப்பட்டு பல சமூக சீர்கேடுகள் ஏற்படுவதை நோக்கும் போது பெண்கள் தமது முகம், மணிக்கட்டுகள் உட்பட முழு உடம்பையும் மறைக்கவேண்டியதின் அவசியத்தை உணரமுடிகின்றது” அறிவித்தது.

இலங்கை

இந்த கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகள்:

இலங்கை

ஆனால், இந்த ஃபத்வா ஒரு இறுக்கமான ஒன்றாக இருக்கவில்லையென்றாலும் உலாமாக்களைச் சார்ந்த பெண்கள் இதை அணியத் துவங்கியிருந்தார். இலங்கை போன்ற பல்லின மக்கள் வசிக்கும் நாட்டில் இப்படியான ஆடை அணிவது குறித்த விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்த வண்ணம் இருந்தன.

ஆனால், 2010களின் மத்தியப் பகுதியில், நிகாப் அணிவது ஏல்லோராலும் ஏற்கப்பட்ட, சாதாரணமாக ஒரு விஷயத்தைப்போல ஆகிப்போனது. அணிய விரும்பாத பெண்கள் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, முகத்தை முழுவதுமாக மூடும் நிகாப் அணிய இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. “ஆனால், இத்தனை ஆண்டுகளாக நிகாப் அணிந்திருந்த பெண்கள், தற்போது அதனை அணியாமல் செல்ல கூச்சமடைகிறார்கள்” என்கிறார் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா.

இலங்கையில் புதிய போக்கை நோக்கி செல்லும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை

இப்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைவரையும் பிடித்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. “இம்மாதிரியான பயங்கரவாதப் போக்குடைய அமைப்புகளை கிழக்கிலங்கை இஸ்லாமியர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். புலிகள் வடக்கில் கோலோச்சிய காலத்தில், அவர்களுக்கு ஒரு ஆதரவு தளம் வடக்கிலும் கிழக்கிலும் இருந்தது. நியாய உணர்வுடையவர்களாக தங்களைக் கருதும் சிங்களர்கள்கூட புலிகளின் போராட்டங்களை ஆதரித்தனர்.

அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தால்கூட அரச படையினரிடம் யாரும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் இவர்களைக் காட்டிக்கொடுக்க எல்லோருமே தயாராக இருந்தார்கள். யாருமே இந்தத் தாக்குதலையும் அதன் பின்னாலிருந்த சித்தாந்தத்தையும் ஆதரிக்கவில்லை” என்கிறார் றமீஸ் அப்துல்லா.

இலங்கையின் இஸ்லாமிய சமுதாயம், தொடர்ச்சியாக பல மாற்றங்களுக்கு முகம்கொடுத்து வந்திருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வி என்பது ஒரு எட்டாக் கனவு. இப்போது எல்லாப் பெண்களும் கற்கிறார்கள்; கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

கிழக்கிலங்கைக்கென தனியான ஒரு இலக்கியப் போக்கு உருவாகியிருக்கிறது. அனார், ஷர்மிளா சையத், மாஜிதா போன்ற பெண்களே இதை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

இலங்கையில் புதிய போக்கை நோக்கி செல்லும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை

“கிழக்கிலங்கையில் காத்தான்குடி போன்ற இஸ்லாமியர்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் பல நல்ல அம்சங்கள் உண்டு. ஆண்கள் குடிப்பது மிக மிகக் குறைவு. வட்டி என்பதில்லை. போதை மருந்து பாவனை கிடையாது. ஷஹ்ரான் இந்தப் பகுதிக்கு தந்த அடையாளம் மாறி, நல்ல காரணங்களுக்காக இந்தப் பிரதேசம் மீண்டும் அறியப்படும்” என நம்புகிறார்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமை. பிற்பகல். திடீரென மேகங்கள் சூழ்ந்து இடியுடன் கடும் மழை பெய்ய ஆரம்பிக்கிறது காத்தான்குடியில்.

ஷஹ்ரான், ரில்வான், ஜைனி ஆகிய பெயர்களிலிருந்தும் அவர்கள் முன்வைத்த பயங்கரவாத சித்தாந்தங்களிருந்தும் தன்னை விலக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பிரதேசம், அமைதியும் இறை நம்பிக்கையும் நிலவிய கடந்த காலத்தை நோக்கி வேகமாக பயணிக்க ஆரம்பிக்கிறது. -BBC_Tamil

TAGS: