இலங்கை உள்நாட்டுப் போர்: போரின் இறுதியில் காணாமல் போன பாதிரியார் பிரான்சிஸின் நிலை என்ன?

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து இன்றுடன் பத்து ஆண்டுகளாகிறது. தங்களது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போரின்போது இழந்த பல்லாயிரக்கணக்கானோர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்த கட்டுரையில் பாதிரியார் பிரான்சிஸின் கதையை பார்ப்போம்.

சுமார் ஒரு லட்சம் பொது மக்கள் உயிரிழப்பிற்கு வித்திட்ட 26 ஆண்டுகள் நடைபெற்ற இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போர் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முடிவடைந்தது.

இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்கு தனி நாடு கோருவதை முதலாக கொண்டு இலங்கை அரசுப்படைகளுக்கும், தமிழர்கள் தரப்பில் விடுதலை புலிகள் அமைப்பினருக்கும் இடையில் இந்த போர் நடைபெற்றது.

போரின் இறுதி நாள் அன்று, தமிழரான கத்தோலிக்க மத போதகர் ஒருவர் தலைமையிலான குழுவினர், விடுதலை புலிகள், பொது மக்கள் உள்ளிட்ட 360 பேரை இலங்கை ராணுவத்திடம் சரணடைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் அனைவரும் இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான பேருந்தில் ஏற்றப்பட்டனர்; அதன் பிறகு அவர்களை யாரும் பார்க்கவேயில்லை.

தமிழர்களுக்கு தனிநாடு கோரும் முடிவுக்கு ஆதரவாளரான பாதிரியார் பிரான்சிஸ் ஒருபோதும் ஆயுதங்களை தூக்கியதில்லை. அவர் வார்த்தைகளையே ஆயுதமாக பயன்படுத்தினார்.

போர் முடிவடைவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர், கைவிடப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், வத்திக்கானிடம் உதவி கேட்டு மூன்று பக்க கடிதத்தை பதுங்கு குழி ஒன்றிலிருந்து அவர் எழுதினார். அந்த பதுங்கு குழி தற்போது தமிழர்களின் மரணத்தை குறிக்கும் நினைவிடமாக உள்ளது. பாதிரியார் எழுதிய கடிதம் குறித்து மேலதிக தகவல்களை அறிவதற்காக வத்திக்கானை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால், இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

தனது கடிதத்தை எழுதிய சில நாட்களிலேயே, போரில் விடுதலை புலிகள் வீழ்த்தப்பட, பாதிரியார் பிரான்சிஸ் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் சேர்ந்து நாட்டின் வடகிழக்கு பகுதியிலுள்ள வட்டுவாகல் பாலம் வழியே அரசாங்கக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதிக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த நீர்நிலை முழுவதும் இரத்தம் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்களால் நிரம்பியிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நாள் வரை, இறுதிக்கட்ட போரின்போது மாயமான தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நிலையை அறிவிக்க கோரி வடக்கு மாகாணம் முழுவதும் போரட்டங்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

போரின் இறுதியில் காணாமல் போன பாதிரியார் பிரான்சிஸின் நிலை என்ன?

இலங்கை உள்நாட்டுப் போரின் கடைசி சில மாதங்களில் மட்டும் சுமார் 40,000 பேர் உயிரிழந்ததாகவும், பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் நிலையில், அதில் கால்வாசிக்கும் குறைவான எண்ணிக்கையினரே உயிரிழந்ததாக அரசுத்தரப்பு கூறுகிறது.

தங்களிடம் சரணடைந்தவர்களை கொலை செய்யவில்லை என்று தெரிவிக்கும் இலங்கை அரசு, தனிப்பட்ட புகார்கள் தொடர்பாக எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை.

90 வயதாகும் மோசஸ் அருளானந்தன் தொலைந்து போனதாக கருதப்படும் பாதிரியார் பிரான்சிஸின் நெருங்கிய உறவினர். பாதிரியாரை கண்டுபிடித்து தருமாறு இலங்கை நீதிமன்றத்திலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் அவர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இன்னும் யாரும் செவிசாய்க்கவில்லை.

“என் சகோதரனை நினைத்து, வருந்தி, கதறி அழுவதை தவிர என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று அவர் கூறுகிறார். “நாங்கள் ஒன்றாக பிறந்த சகோதரர்களை போன்று பழகினோம். பிரான்சிஸ் அவர்களது பெற்றோருக்கு ஒரே பிள்ளை.”

யாழ்ப்பாணத்திலுள்ள செயின்ட் பாட்ரிக் கல்லூரிக்கு முதல் முறையாக மாணவனாக வந்த பாதிரியார் பிரான்சிஸ், பின்பு கத்தோலிக்க மத போதகராக ஆன பிறகு, அதே இடத்திலுள்ள பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராகவும், பின்பு அதன் தலைமையாசிரியராகவும் உயர்ந்தார். பாதிரியார் பிரான்சிஸின் பெரும்பான்மையான வாழ்க்கை, வகுப்பறைகள், தேவாலய பணிகள் மற்றும் பள்ளி அணியின் கிரிக்கெட் போட்டிகளை மைதானத்தில் ஊக்குவிப்பதிலேயே கழிந்தது.

போரின் இறுதியில் காணாமல் போன பாதிரியார் பிரான்சிஸின் நிலை என்ன?

தனது பள்ளியில் படித்த அனைத்து மாணவர்களின் பெயரையும் பாதிரியார் பிரான்சிஸ் நினைவில் வைத்திருந்ததாக அவரது முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவரை நினைவு கூரும் வகையில் அட்டையில் செய்யப்பட்ட அவரது உருவம் அப்பள்ளியின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு நாளும், பிரான்சிஸ் இருக்கும் இடத்தையும், அவரது தற்போதைய நிலையையும் காட்டுமாறு கடவுளிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்” என்று அழுதுகொண்டே அருளானந்தன் கூறுகிறார்.

இந்நிலையில், அரசாங்கப் படைகளை பாதிரியார் பிரான்சிஸ் மிகக் கடுமையாக விமர்சித்ததாகவும், ஆனால் கிளர்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களைப் பற்றி அவர் அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈழம் என்று அழைக்கப்படும் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கில், புலிகள் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர்; இதில் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள், வெகுஜனக் கொலைகள் மற்றும் ஆண் மற்றும் பெண் தற்கொலை குண்டுதாரிகளின் பயன்பாடு ஆகியவை அடங்கும். 2002க்கும் 2007க்கும் இடையில் காலக்கட்டத்தில் மட்டும் குறைந்தபட்சம் 6,000 சிறுவர்களை விடுதலை புலிகள் அமைப்பு வேலைக்கு அமர்த்தியதாகவும், 1,300க்கும் மேற்பட்டோரின் பின்புலத்தை உறுதிசெய்ய முடியவில்லை என்றும் ஐ.நாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரின் இறுதியில் காணாமல் போன பாதிரியார் பிரான்சிஸின் நிலை என்ன?

பாதிரியார் பிரான்சிஸுடன் ராணுவத்துக்கு சொந்தமான பேருந்தில் ஏறிவரும், விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் மனைவியான ஜெயக்குமாரி கிருஷ்ணகுமாரை சந்தித்தோம். “பேருந்தில் முதலாவதாக என்னுடைய கணவர் ஏற, மற்ற அனைவரும் ஒன்றன் பின்னொன்றாக பேருந்தில் ஏறிய பிறகு, கடைசியாக உள்ளே சென்ற பாதிரியார் பிரான்சிஸ், அனைவரது பெயர்களையும் எழுதினார். ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதற்கு அனைவரும் பயந்தனர்; ஆனால், பாதிரியாருடன் இருந்தால் தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று மக்கள் நம்பினர்” என்று அவர் கூறுகிறார்.

“இலங்கை ராணுவத்தினரின் பிடிக்குள் சென்ற மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே சமயத்தில் காணாமல் போன நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது” என்று கூறுகிறார் இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை அமைத்த குழுவில் உறுப்பினராக இருந்த யாஸ்மின் சோக்கா.

நீதிமன்றங்களை நாடியதில் எவ்வித முன்னேற்றமும் கிட்டவில்லை என்று காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிரியார் பிரான்சிஸின் நிலை என்ன?

போரின் இறுதியில் காணாமல் போன பாதிரியார் பிரான்சிஸின் நிலை என்ன?

போரின்போது காணாமல் போனவர்களின் நிலை குறித்த விசாரணைக்கு உத்தரவிட கூறி சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்திற்கு பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு சிறப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல – போரின்போது காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோரை கண்டுபிடிக்கும் மிகப் பெரிய பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதுவரை ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.

“குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நாங்கள் காணாமல் போனவர்களை தேடுகிறோம் என்று கூறிவிட்டு எங்களது பணியை செய்துவிட முடியாது. காணாமல் போனவர்களை தேடுவது, அதுகுறித்த தரவுத்தளத்தை உருவாக்கி மேம்படுவதெல்லாம் சாதாரண காரியமல்ல; அதற்கு நீண்ட காலமெடுக்கும்” என்று காணாமல் போனவர்களை தேடும் குழுவின் தலைவரான சலியா பெரிஸ் கூறுகிறார்.

ஆனால், இன்னமுமகூட காணாமல் போன தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பலர் உள்ளனர்.

குறிப்பாக, காணாமல் போன ஆண்களின் மனைவிகள், தங்களது நெற்றியில் திருமணத்தையும், கணவர் உயிருடன் இருப்பதையும் குறிக்கும் வகையில் சிவப்பு நிற திலகத்தை இட்டு வருகின்றனர்.

அதேபோன்று, காணாமல்போன தங்களது பெற்றோர்கள் கண்டிப்பாக திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் குழந்தைகள் உள்ளனர். மேலும், பாதிரியார் பிரான்சிஸை கண்டுபிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையை ஒருவர் கூட இழக்கவில்லை.

“ஒருநாள் உண்மை வெளிவரும்” என்று அருளானந்தன் கூறுகிறார். -BBC_Tamil

TAGS: