மே 18: இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின் முள்வேலி முகாமில் வாழ்க்கையை தொலைத்து இன்றும் போராடும் ஜெயவனிதா

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளான பெரும்பாலான தமிழர்கள், அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட வரலாறு இன்றும் மறக்க முடியாத நினைவுகளாகவே இருக்கின்றன.

அதிலும், அருணாசலம், ஆனந்தகுமாரசிறி, இராமநாதன், பூந்தோட்டம் உள்ளிட்ட பல முகாம்கள், முள்வேலிகளினால் அமைக்கப்பட்ட முகாம்களாகவே காணப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டபோது, ஒரு தொகுதி கூடாரங்கள் முள்வேலிகளால் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த முள்வேலி முகாம்களுக்கு முழுமையாக இலங்கை ராணுவம் பாதுகாப்பு வழங்கியதுடன், அந்த கூடாரங்களில் வாழ்ந்த மக்கள் முள்வேலிகளை கடந்து வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

முள்வேலி முகாமில் வாழ்க்கையை தொலைத்து இன்றும் போராடும் ஈழப் பெண்

மக்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் இந்த முள்வேலிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வரலாற்று சான்றுகள் இன்றும் காணப்படுகின்றன.

முள்வேலிக்குள் அடைக்கப்பட்ட மக்கள் குளிப்பதையும், மல சல கூடங்களை பயன்படுத்துவதையும் ராணுவத்தினர் வழங்கிய நேரத்திலேயே செய்யவேண்டி இருந்தது என இந்த முகாகளில் இருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதுவும், குளிப்பதற்கும், குடிநீரை பெற்றுக் கொள்வதற்கும், மல சல கூடங்களை பயன்படுத்துவதற்கும் சரியான முறையான வசதிகள் எதுவும் ராணுவத்தினர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு முள்வேலி முகாமில் வாழ்ந்தவர்களில் ஒருவரே காசிப்பிள்ளை ஜெயவனிதா.

முள்வேலி முகாமில் வாழ்க்கையை தொலைத்து இன்றும் போராடும் ஈழப் பெண்

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி முள்ளிவாய்க்கால் – இரட்டைவாய்க்கால் பகுதியில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்த பகுதியிலிருந்து வெளியேறி, ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு பெருந்திரளானோர் வருகை தந்திருந்தனர். அவர்களில் காசிப்பிள்ளை ஜெயவனிதாவும் ஒருவர்.

இவர் தனது குடும்பத்தாருடன், இரட்டைவாய்க்கால் பகுதியிலிருந்து முல்லைத்தீவு ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

முள்வேலி முகாமில் வாழ்க்கையை தொலைத்து இன்றும் போராடும் ஈழப் பெண்

இவ்வாறு இவர்கள் ராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வருகைத் தந்த தருணத்தில், ராணுவ வாகனமொன்று தம்மை நோக்கி வந்ததாக கூறுகின்றார் காசிப்பிள்ளை ஜெயவனிதா.

இந்த வாகனத்தில் வருகைத் தந்தவர்கள் தனது குடும்பத்தாரையும், மேலும் பலரையும் அந்த வாகனத்தில் ஏற்றி வெளிப் பகுதியை நோக்கி அழைத்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், வாகனத்தில் வருகை தந்தவர்கள் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, சிலரை அதிலிருந்து இறக்கியுள்ளதுடன், தனது 16 வயதான மூத்த மகள் ஜெரோனியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் கடத்தி சென்றதாக ஜெயவனிதா தெரிவிக்கின்றார்.

முள்வேலி முகாமில் வாழ்க்கையை தொலைத்து இன்றும் போராடும் ஈழப் பெண்

தனது மகளை காப்பாற்றுவதற்கு பல தடவைகள் முயற்சித்த நிலையில், அந்த வாகனத்தில் வருகை தந்தவர்கள் தனது பாதணிகள் அணிந்த கால்களினால் தன்மீது தாக்குதல் நடத்தி தனது மூத்த மகளை கடத்தி சென்றதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.

தனது மகளை பிரிந்த சோகத்துடன், தனது கணவர் மற்றும் ஏனைய பிள்ளைகளுடன் காசிப்பிள்ளை ஜெயவனிதா, இராமநாதன் முகாமில் தஞ்சமடைந்துள்ளார்.

கூடாரத்திற்குள், எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி 2009ம் ஆண்டு மே மாதம் 17 முதல் அதே ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி வரை அந்த முகாம் வாழ்க்கையை வாழ்ந்ததாக கூறுகின்றார் ஜெயவனிதா.

மைத்திரிபால சிறிசேன

இராமநாதன் முகாமில் 45 பிரிவுகள் காணப்பட்ட போதிலும், அந்த முள்வேலிக்குள் ஆண்கள், பெண்கள், சிறார்கள் அனைவரும் ஒன்றாக குளித்து, ஒன்றாகவே இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையை எதிர்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் முள்வேலிகளை தாண்டி எவரும் செல்ல முடியாது. முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அது காணப்பட்டது. இந்த குறுகிய காலத்திற்குள் தான் வாழ்ந்த வாழ்க்கை, ஒரு நரக வாழ்க்கைக்கு சமமானது என அவர் கூறுகின்றார்.

ராணுவத்தினரால் வழங்கப்பட்ட உணவு, உண்ணும் அளவிற்கு இருக்காது எனவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற பிஸ்கட்கள் மற்றும் ஏனைய சில உணவு பொருட்களை கொண்டே தமது வாழ்க்கையை அந்த காலத்தில் வாழ்ந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான பல இன்னல்களுக்கு மத்தியில் தமது குடும்பம் மீள் குடியமர்த்தப்பட்டதாக காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.

இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகின்ற தருணத்தில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரமொன்றில், மைத்திரிபால சிறிசேனவுடன் தனது மகள் இருப்பது பத்திரிகையில் வெளியான புகைப்படமொன்றின் மூலம் காசிப்பிள்ளை ஜெயவனிதா கண்டுள்ளார்.

முள்வேலி முகாமில் வாழ்க்கையை தொலைத்து இன்றும் போராடும் ஈழப் பெண்

மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்று, யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட தருணத்தில், ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் தான் தெளிவூட்டியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தான் கொழும்பிற்கு சென்று இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி இன்று வரை மௌனம் காத்து வருவதாகவும், தனது பிள்ளையை தேடும் போராட்டத்தை இன்று வரை தொடர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியாக செயற்படும் காசிப்பிள்ளை ஜெயவனிதா, வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்றும் குரல் எழுப்பியவாறே இருக்கின்றார்.

முள்வேலி முகாமிற்கு வருகைத் தரும் தருணத்தில் தனது பிள்ளையை இழந்த அவர், இன்றும் பிள்ளையை தேடி மனதளவில் முள்வேலி முகாமிற்குள்ளேயே இருக்கின்றமை மறைக்கப்படாத உண்மை. -BBC_Tamil

TAGS: