இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது உறுதி

கொழும்பு – ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மூன்று கிறிஸ்தவ தேவாலங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதில் கொழும்பிலுள்ள ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் இருவர் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.

அவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.

எனினும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளில் தெரியவந்ததாக பல தடவைகள் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண்ணும் சிறுமியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.

அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர்கள், பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புவிற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமையவே இந்த டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளுடன், ஷங்கிரில்லா நட்சத்திர விடுதியில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் டி.எச்.எல்.டபிள்யூ. ஜயமான பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த டி.என்.ஏ பரிசோதனையின் ஊடாக, மொஹமத் சஹ்ரான் ஹாஷிம், தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையை விரைவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மொஹமத் சஹரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பில் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-BBC_Tamil

TAGS: