உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரவாதி வெளிநாட்டில் சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான பயங்கரவாதி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரான் குழுவினருக்கு ஆயுத பயிற்சி வழங்கிய மொஹமட் மில்ஹான் என்பவர் சவுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

குறித்த பயங்கரவாதியை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை சவுதி அரேபிய குற்ற விசாரணை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதியான மொஹமட் மில்ஹான் தொடர்பில் சவுதி அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தமையினால், அவரை இலங்கையிடம் ஒப்படைப்பது தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டது. எனினும் இராஜதந்திர மட்டத்தில் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய சாதகமான பதில் கிடைத்துள்ளதாக இலங்கை விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பிற்கு தலைமை தாங்கிய மில்ஹான் இரண்டாம் மட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு தயாராக இருந்தவர் என தெரியவந்துள்ளது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு நாசகார வேலையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தமை அம்பலமாகி உள்ளது.

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி இரவு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளை கொலை செய்தவர் மில்ஹான் என தெரியவந்துள்ளது.

அதேவேளை அமைச்சர் கபீர் ஹாசீமின் செயலாளரான மொஹமட் நஸ்லிம் என்பவரே கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி கொலை செய்ய முயற்சிகளையும் மில்ஹான் மேற்கொண்டுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளும் போது மக்கா தொழுகைக்கு சென்றிருந்தவர் கடந்த மாதம் 30ஆம் திகதி இலங்கை வரவிருந்தார். அதற்காக சவுதி விமான நிலையத்திற்கு சென்ற போதிலும் அவர் விமானத்தில் ஏறாமல் விமான நிலையத்தில் மறைந்துள்ளார்.

இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் சர்வதேச பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவுக்கு வழங்கிய தகவலுக்கமைய விமான நிலையத்தில் வைத்து மில்ஹான் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு 20 நாட்களான போதும் இன்னமும் மில்ஹானை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு சவுதி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் அவர் இலங்கை அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-athirvu.in

TAGS: