குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு – இலங்கை அரசு உறுதி செய்தது!

இலங்கை குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பை ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மூலம் நடத்தியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது சி4 ரக வெடிகுண்டுகள் என விசாரணை அதிகாரிகள் கருதினர். அவற்றை விடுதலைப்புலிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டு சி4 ரகத்தை விட அதிக எரிசக்தி கொண்டது. எனவே இந்த வெடிகுண்டுகளை தயாரிக்க நிறைய ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருப்பதால் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

ஷாங்ரிலா ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலை படை பயங்கரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒருவரது உடல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ‌ஷக்ரான் காசிம் என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே குண்டு வெடிப்பில் அவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே குண்டு வெடிப்பு நடந்து ஒரு மாதம் நிறைவடைந்ததை இலங்கையில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கண்ணீருடன் துக்க தினமாக கடைபிடித்தனர். குண்டு வெடிப்பு நடந்த தேவாலயத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

-athirvu.in

TAGS: