8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்…! – ‘திவயின’ பத்திரிகை தகவல்

சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, தான் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திர சிகிச்சை புரிந்தமையை ஒப்புக்கொண்டார் என ‘திவயின’ பத்திரிகை இன்று (25) செய்தி வெளியிட்டுள்ளது. அவர் கருத்தடை சத்திர சிகிச்சையை சட்டவிரோதமாக மேற்கொண்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, குருணாகல் பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நேற்று விசாரணை இடம்பெற்றது. இதன்போது அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளார். சட்டவிரோதக் கருத்தடை சத்திர சிகிச்சை, வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களின் ஊடாக அவர் பெருமளவில் பணம் ஈட்டியுள்ளார் எனப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆனால், நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர், சந்தேகத்துக்கு இடமான முறையில் சொத்து சேகரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகவே கைதானார் என்று பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் கருத்தடை சத்திர சிகிச்சையைப் புரிந்தாரா? என்பது தொடர்பில் பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அவர் 4000 சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையைப் புரிந்தார் என ‘திவயின’ செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து, இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி வெளியாக்கப்பட்டதை அடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும், தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் குறித்த வைத்தியர், வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கோரியிருந்தார். இந்த விடயம் நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து சபையில் அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருந்த போதிலும், நேற்று அவ்வாறான தெளிவுபடுத்தல் எதனையும் சபையில் அவர் வழங்கவில்லை. எனினும், சட்டவிரோதக் கருத்தடை சத்திர சிகிச்சை இடம்பெற்றமை தொடர்பாகப் பொலிஸாரோ, புலனாய்வுப் பிரிவோ எந்த விசாரணைகளையும் நடத்தவில்லை என்று நேற்றுமுன்தினம் கூறிய சபாநாயகர், நேற்றைய அமர்வில் வைத்து இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ஆராய்ந்து வருகின்றார் எனக் குறிப்பிட்டார்.

http://eelamnews.co.uk

TAGS: