ஈழத்தில் பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் நடந்த சம்பவம்; கடும் கொதிப்பில் தமிழர்கள்!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரத்தை பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைக்க தொல்பொருள் திணைக்களம் துணை போகின்றது.

சட்டம் பௌத்தத்திற்கும் இந்துவிற்கும் இடையே பாகுபாடு காட்டுவதினால் இலங்கையில் எப்படி நல்லுறவு ஏற்படும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைத்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு 25ஆம் திகதி கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 22ஆம் திகதி ஆலயத்தின் அன்றாட பூசைக்கு நாம் சென்ற பொழுது எமது புராதன பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நாம் “அதனை ஏன் உடைக்கின்றீர்கள்” என கேட்டோம்.

அதற்கு பதிளித்த சிலர் “இவ்விடத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளோம்” என தெரிவித்தனர்.

உடனடியாக அங்கிருந்து சென்று பலருக்கும் இதை தெரிவித்தேன். அத்துடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதை நிறுத்தினோம்.

எனினும் வரலாற்று பொக்கிசங்களையும் ஆலயங்களையும் தொல்பொருள் திணைக்களம் பௌத்த பிக்குமாரின் தலையீட்டின் காரணமாக அபகரித்து வைத்து அவற்றை உடைத்து அழிப்பதுடன், இந்த நிலை நீடித்துக்கொண்டே போகின்றமை இன நல்லுறவுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.

கன்னியா இந்துக்களுக்கும், தமிழர்களுக்கும் சொந்தமான பாரம்பரிய இடம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இதை அனைவரும் ஏற்கும் நிலையில் சில பௌத்த குருக்களின் அடாத்தான செயற்பாடுகள்லேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இவை நிறுத்தப்பட வேண்டும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின்குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: