நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரான ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் கடந்த வாரம் விடுதலையானார். மக்கள் போராட்டங்களை நடத்தி சிறை சென்று திரும்பும் தலைவர்களை வரவேற்பதற்கு உண்டான வரவேற்பை ஞானசார தேரருக்கும் வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சிறை வாசலில் கூடியிருந்தார்கள். அதனை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்காக தொலைக்காட்சிகள் சிலவும் காத்திருந்தன.
பொதுபல சேனா என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பின் உருவாக்கமும் நோக்கமும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அடிப்படைகளைக் கொண்டது. பௌத்த ஏகாதிபத்தியத்தை வாழ்வாகவும், அரசியல் நெறியாகவும் கொண்டிருக்கின்ற தென் இலங்கையில், பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் காலத்துக்குக்காலம் தோன்றி வந்திருக்கின்றன. அதில் சில அமைப்புக்களுக்கு குறுகிய காலச் செயற்திட்டங்கள் இருக்கும். அந்தச் செயற்திட்டங்கள் நிறைவுற்றதும், அந்த அமைப்புகள் கலைந்துவிடும். இலங்கையில் இன முரண்பாடுகளுக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் மற்றும் புதிய அரசியலமைப்பு பற்றிய உரையாடல்கள் எழுந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பௌத்த பீடங்களும், பௌத்த சிங்களப் பெரும்பான்மைவாதிகளும் பிக்குகளை முன்னிறுத்திக் கொண்டு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்காக மத அடிப்படைவாத குழுக்களை ஆரம்பித்திருக்கின்றன. இன்றைக்கு ஜாதிக ஹெல உறுமயவாக வளர்ந்து நிற்கும் அரசியல் கட்சியும் ஒரு காலத்தில் அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான். அந்த அடிப்படைகளோடுதான் ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் ஞானசார தேரர் உள்ளிட்டவர்களை முன்னிறுத்திக் கொண்டு பொதுபல சேனா ஆரம்பிக்கப்பட்டது. பொதுபல சேனாவின் காலி அலுவலகத்தை அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைத்திருந்தார்.
போர் வெற்றிவாதத்தை முன்னிறுத்திக் கொண்டு 2010இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்த ராஜபக்ஷக்களுக்கு, போர் வெற்றிவாதம் மட்டும் எதிர்காலத்தில் தேர்தல்களை வெற்றிகொள்ளப் போதாது என்ற உண்மை மெல்ல மெல்ல உறைக்கத் தொடங்கியது. அந்த நிலையிலேயே, பொதுபல சேனா போன்ற அமைப்புக்களைக் கொண்டு இனமுரண்பாடுகளை வேறு வழிகளில் தோற்றுவித்து அதில் குளிர்காயலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதன்போக்கிலேயே, பொதுபல சேனா, 2010க்குப் பிறகு தன்னுடைய செயற்பாடுகளை தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக பெருமெடுப்பில் முன்னெடுக்க ஆரம்பித்தது. இந்து ஆலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் வழமையான ஒன்றாக மாற ஆரம்பித்தது. ஆனாலும், அந்த தாக்குதல்கள் எதிர்பார்த்த வரவேற்பை தென் இலங்கை மக்கள் மத்தியில் பெறவில்லை. இது, பௌத்த அடிப்படைவாதிகளுக்கு ஏமாற்றமளித்தது. அப்போதுதான், முஸ்லிம் எதிர்ப்பு என்கிற விடயத்தினை பிரதானமாக்கிக் கொண்டு சதித்திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தார்கள். அதன்வழிதான், ஹலால் எதிர்ப்பு, பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், பர்தா உள்ளிட்ட ஆடைகளுக்கான எதிர்ப்பு என்று விடயங்கள் தொடர்ச்சியாக முன்னிறுத்தப்பட்டன. அது, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை தென் இலங்கையில் குறிப்பிட்டளவு வளர்த்துவிட்டது.
தமிழ், முஸ்லிம் எதிர்ப்பு மனநிலை என்பது தென் இலங்கைக்கு புதிதில்லை. ஆனால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீண்ட யுத்தம், தமிழர்களை பிரதான எதிரியாக்கி தென் இலங்கையில் அரசியல் ஆதாயங்களுக்கான வாய்ப்புக்களைத் திறந்தது. ஆனால், ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததும் தமிழர் எதிர்ப்பு மாத்திரம் தேர்தல் அரசியலை வெற்றிகொள்ளப் போதாது என்கிற நிலை உருவானது. அதுதான், 1900களின் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் மீதும், அவர்களின் இஸ்லாமிய மார்க்க வாழ்வியல் மீதும் தென் இலங்கையால் தொடுக்கப்பட்ட வன்முறைகளை, பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களைக் கொண்டு மீள நிகழ்த்த ஆரம்பித்தார்கள். 2014இல் பேருவளை மற்றும் அளுத்கம கலவரங்கள் அதனை மோசமாகப் பதிவு செய்தன. இந்த மூர்க்கச் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஞானசார தேரர் தலைமையேற்றிருந்தார். அவரின் இனவாத- மதவாத உரைகள் பொது மேடைகளில் நிகழ்த்தப்பட்டன. அதற்கு எதிரான எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அது, அவரின் வாய்க்கொழுப்பை இன்னும் இன்னும் அதிகரித்துவிட்டது. அதுதான், நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கான தைரியத்தை அவருக்கு வழங்கியது. நீதிமன்றத்தை அவமதிக்கவும் வைத்தது.
இலங்கையின் நீதித்துறையில் அவ்வப்போது அதிசயங்கள் நிகழ்வதுண்டு. அப்படித்தான், ஞானசார தேரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், அதன் தீர்ப்பும் கருதப்படுகின்றது. உண்மையிலேயே, ஞானசார தேரருக்கு எதிரான தண்டனையை தென் இலங்கை எதிர்பார்க்கவில்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்ட கணம் முதல், அவருக்கான பொது மன்னிப்புப் பற்றி, பௌத்த பீடங்களும், பெரும்பான்மைக் கட்சிகளும், பௌத்த ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட சில அடிமைப்புத்திகொண்ட பிற மதத்தலைவர்களும் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். அதனை, மத நல்லிணக்கத்துக்கான அடையாளமாக சில மதத்தலைவர்கள் மக்களிடம் பிரசங்கிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.
கடந்த சுதந்திர தினத்தின் போது, ஞானசார தேரருக்கான பொதுமன்னிப்பை மைத்திரி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரை, அதுவும் தொடர்ச்சியாக வன்முறைகளைப் பரப்பி வந்த ஒருவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது என்பது, இராஜதந்திர கட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று மைத்திரி கருதியதால், சரியான தருணமொன்றுக்காக அவர் காத்திருந்தார். ஞானசார தேரருக்கான பொதுமன்னிப்பு என்பது நாட்டின் பிரதான காரியங்களில் ஒன்றாக ஒவ்வொரு நாளும் கட்டமைக்கப்பட்டு வந்தது. அந்தத் தருணத்தில்தான், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றன. அந்தக் கோரத் தாக்குதல்களுக்குப் பின்னரான நாட்டு மக்களின் கோபத்தினை ஒரு இனத்தின் மீதானதாக மடைமாற்றுவிடுவதில் தென் இலங்கை குறிப்பிட்டளவு வெற்றிகண்டது. அதனால், நிலைமைகளை சாமாளிக்க முடியாமல், சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஞானசார தேரரின் விடுதலை பற்றி பேச ஆரம்பித்தார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஞானசார தேரருக்கான பொதுமன்னிப்பை மைத்திரி வழங்கியிருக்கிறார்.
பொது மன்னிப்பைப் பெற்று விடுதலையான மறுநாள், மைத்திரியைச் சந்தித்து ஞானசார தேரரும், அவரது தாயாரும் நன்றியைத் தெரிவித்தார்கள். அப்போது, எடுக்கப்பட்ட படத்தினை ஜனாதிபதி ஊடப்பிரிவு வெளியிட்டிருந்தது. அந்தப் படங்களில், ஞானசேர தேரர் என்கிற பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டவர் முன்னால், பொதுமன்னிப்பை அளித்த மைத்திரி, பெரியவர்கள் முன்னிலையில் பணிவுடன் அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் போல உட்கார்ந்திருக்கிறார். தண்டனைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு என்பது அவர்களின் எதிர்கால நல்வாழ்க்கையைக் கருதி வழங்கப்பட வேண்டியதுதான். ஆனால், பொதுமன்னிப்பொன்று, அடாத்தாக பிடுங்கி எடுக்கப்படும் அளவுக்கான ஒன்றாக ஞானசேர தேரருக்காக வழங்கப்பட்டிருக்கின்றது. தன்னுடைய அரசியல் நலன்களைக் கருத்திக் கொண்டு, மைத்திரியும் பொதுமன்னிப்பு என்கிற விடயத்தைக் கையாண்டிருக்கின்றார். ஞானசார தேரருக்கான பொதுமன்னிப்பில் மனிதாபிமானமும், நல்லெண்ணமும் கிடையாது. அது, பௌத்த அடிப்படைவாதத்தின் எழுச்சியின் அடாவடித்தனத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது.
நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவரை பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கு தென் இலங்கையும், அதன் அடிமைச் சக்திகளும் காட்டிய அக்கறையின் சிறிய பங்கேனும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் சிறைகளில் ஆண்டுக்கணக்காக வாடும் அரசியல் கைதிகள் மீது காட்டப்பட்டிருந்தால், பல குடும்பங்களின் வாழ்வு வளப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக சிறுபான்மைச் சமூகங்கள் மீது அடக்குமுறைக்கான கட்டங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டுதான், இன- மத நல்லிணக்கம் பற்றி தென் இலங்கை பேசி வந்திருக்கின்றது. அதனையே மைத்திரியும் பிரதிபலித்து வருகின்றார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நீதித்துறை வரைமுறைகளையும், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் மீறியதாக காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு, அரசியலமைப்புக்கு அப்பால் சென்று அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள மைத்திரியின் செயற்பாட்டைக் கண்டிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது. முன்னாள் அமைச்சரான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் ஞானசார தேரரின் விடுதலையை எதிர்த்திருக்கின்றார். இதைத் தவிர்த்து, ஞானசார தேரரின் விடுதலை பற்றி எதிர்ப்புக்குரல்கள் பெரிதாக எங்குமே எழுந்திருக்கவில்லை. மாறாக, அவரின் கால்களில் விழுந்து ஆசிபெறுவதற்காக பல்வேறு தரப்புக்களும் காத்திருக்கின்றன.
அப்படியான நிலையில்தான், தலதா மாளிகையில் வைத்து சுதந்திரப் போராட்டத்தினை நடத்தி சிறை மீண்டவர் போல, “நான் போராடிக் களைத்துவிட்டேன். ஓய்வெடுக்கவே விரும்பினான். ஆனாலும், இளைஞர்கள் என்னை விடுகிறார்கள் இல்லை. நான் சிறையிலிருந்து விடுதலையானதிலிருந்து ஒரு நாளைக் கூட நிம்மதியாகக் கழிக்க முடியாதளவிற்கு தற்போது நாட்டின் நிலைமை மிக மோசமாகக் காணப்படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்காக எமது சுக துக்கங்களை துறக்க வேண்டியுள்ளது. பௌத்த சங்கங்களைக் கூட்டிக்கொண்டு போராடப்போகிறேன்.” என்று ஞானசார தேரர் முழங்கியிருக்கின்றார். தேர்தல்களுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், ஞானசார தேரரும் அவரது பரிவாரங்களும் என்னவெல்லாம் செய்யப்போகின்றனவோ என்று நினைத்தாலே அச்சம் படர்கிறது.
(புருஜோத்தமன் தங்கமயில்)
-4tamilmedia.com