அனைத்து சிறைச்சாலைகளிலும் தமிழ் கைதிகள் போராட்டம்

இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் அனைத்துச் சிறைகளிலும் உள்ள தமிழ் கைதிகள் சிலர் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கூறப்பட்டுள்ளது.

இதேபோன்ற தாக்குதல் சம்பவங்கள், இதற்கு முன்னரும் கண்டி போகாம்பரை, பதுளை, மட்டக்களப்பு, அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் வெலிக்கடை போன்ற சிறைகளில் இடம்பெற்றிருப்பதாக கூறியுள்ள கைதிகள், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை என்று கூறியே இந்த போராட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையில் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் சில கைதிகளின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கைதிகளின் விவகாரம் தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரான சந்திரசிறி கஜதீரவை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

அநுராதபுரம் கைதிகள் மாவீரர் நாளை கொண்டாட முயற்சித்ததாக தம்மிடம் அரசாங்க தரப்பில் கூறப்பட்டதாக பிபிசியிடம் கூறிய நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், இருந்தபோதிலும் கைதிகள் தாக்கப்பட்டிருக்கக் கூடாது என்று தாம் அரசாங்க தரப்பிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

அதேவேளை இந்தக்கைதிகளின் பாதுகாப்புக் கருதி அவர்களை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றுவது குறித்தும் தாம் அமைச்சரிடம் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.