தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு; மோடியிடம் சம்பந்தன் தெரிவிப்பு!

இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கே உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட அனைத்து அரசியலமைப்புகளும் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது. ஆகவே, இந்த விடயம் தொடர்பில் அதிகூடிய கரிசனை செலுத்த வேண்டும் என்றும் அவர் இந்தியப் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் தீர்வு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதையும்அவர் மோடியிடம் அழுத்தமாகத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட இந்தியப் பிரதமர், அதிகாரப் பகிர்வு தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு புதுடில்லிக்கு வருமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பனருக்குமிடையில் இந்திய இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இரா.சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பான கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பில், இரா.சம்பந்தனுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தருமலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து உட்பட இந்திய உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-4tamilmedia.com

TAGS: