வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் நடத்திவருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசு தடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டபின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “முப்பது வருடமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தமானது சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் நவீன வசதி வாய்ப்புக்களை அரசாங்கத்தின் ஊடாகவும், வெளிநாடுகளின் ஊடாகவும் பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆனால் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள் எதுவித உதவிகளோ, அனுசரணைகளோ அற்ற நிலையில் மூன்று வேளை உணவுக்குக்கூட சிரமப்படுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கின்றோம்.
இவ்வாறான விடயங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பல முறை பேசி வந்திருக்கிறேன். ஆனால் வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளைப் போன்றே மாறி மாறி வந்த அரசாங்கங்கள் நடத்தியுள்ளன.
இவ்வாறான நிலையில் சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசாங்கம் தடுத்துநிறுத்தவும் பின்னிற்கவில்லை” என்று தெரிவித்தார்.
-http://eelamnews.co.uk