கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளியாக இருந்த கௌரிக்கு இப்போது வயது 26. ரோஷன் போன்றவர்களைக் கொண்ட அடக்குமுறை ஆட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு எதிராக போராடிய இயக்கத்தைச் சேர்ந்தவர் அவர்.
நான் சிங்களர்களைப் பார்த்ததோ அல்லது பேசியதோ கிடையாது'' என்கிறார் கௌரி.
அவர்கள் கெட்டவர்கள், எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று நினைத்திருந்தோம்” என்று அவர் கூறினார்.
ரோஷனை பொருத்தவரையில் விடுதலைப்புலிகள் வெறுப்புக்கு உரியவர்களாக இருந்தனர். 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் அவர்களுடைய தாக்குதல்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம்.
நாங்கள் ஒருவரை ஒருவர் எதிரியாகத்தான் பார்த்துக் கொண்டோம்'' என்று பி.பி.சி.யின் 'பிரிவினைகளைக் கடந்து' (Crossing Divides) பகுதிக்கு அளித்த பேட்டியில் கூறினார் 29 வயதான ரோஷன். சிதறிவிட்ட பூமியில் மக்கள் ஒன்று சேருவது பற்றிய நிகழ்ச்சி அது
ஆனால், இப்போது திருமணம் செய்து கொண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் காதலின் அடையாளம் தான் எங்களுடைய மகள்” என்று ரோஷன் கூறினார்.
எனவே, வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், குட்டி மகள் செனுலி சமல்காவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது போன்ற கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலைக்கான மாற்றத்தை ஏற்படுத்தியது எது?
`என் தோழியர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்’
பெரும்பான்மை சிங்களர்களின் தேசியவாத செயல்பாடுகள் அதிகரித்ததால் ஏற்பட்ட கோபத்தில் – 1983ல் ஒரு தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து தமிழ்ப் போராளிகளின் மோதல் இலங்கையில் ஆரம்பமானது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடித்தன. அதில் சிறுபான்மையினரான அவர்களில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.
கௌரியின் வாழ்வில் மோதல் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த விஷயமாகிவிட்டது. ஆனால், 2009 ஜனவரியில், திரும்ப முடியாத வகையில் மாற்றம் ஏற்பட்டது. தன்னுடைய மூத்த சகோதரர் சுப்ரமணியம் கண்ணன் ஓட்டிச் சென்ற டிராக்டர் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கியது என்ற தகவல் வந்த பிறகு அந்த மாற்றம் நிகழ்ந்தது.
வடக்கு இலங்கையில் விடுதலைப்புலிகள் வசமிருந்த விஷ்வமடு என்ற அவருடைய கிராமத்திற்கு அருகே, அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து அந்த டிராக்டர் மீது தாக்குதல் நடந்திருக்கிறது.
மனம் உடைந்த நிலையில், சகோதரரைத் தேடி சென்றபோது போராளிகளிடம் சிக்கிக் கொண்டார். 16 வயதான கௌரிக்கு அவர்கள் ஒரு வாரம் பயிற்சி அளித்து, போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டனர்.
மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்'' என்கிறார் கௌரி.
என் தோழியரில் ஒருவர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளானார். அவளைத் தூக்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், அவள் சயனைடு குப்பியைக் கடித்து மரணம் அடைந்தார். மிக மோசமாகக் காயமடைந்துவிட்டதால் இனிமேல் உயிர் பிழைப்பதில் அர்த்தமில்லை என்று சொல்லி அப்படி மரணித்துவிட்டாள்” என்கிறார் கௌரி.
“நாங்கள் குளிப்பதற்கு வசதி கிடையாது. சரியான உணவு கிடையாது. சில நேரங்களில், எதற்காக வாழ வேண்டும் என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்” என்றும் கௌரி குறிப்பிடுகிறார்.
ரோஷனுக்கு 14 வயதாக இருந்தபோது 2004ம் ஆண்டில் அவருடைய வாழ்வில் உள்நாட்டுப் போரின் பாதிப்பு நிகழ்ந்திருக்கிறது.
வவுனியா மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கும், அரசு வசம் இருந்த பகுதிக்கும் இடையில் ரோஷனின் குடும்பம் வசித்த கிராமத்தில் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, விடுதலைப்புலிகளின் குண்டுவீச்சு தாக்குதல் நடந்திருக்கிறது.
பொதுமக்களும், ராணுவத்தினரும் அதில் கொல்லப்பட்டனர். அதன்பிறகு கோபமடைந்த நிலையில், தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் மக்கள் பாதுகாப்புத்துறையினருடன் ரோஷன் குடும்பத்தினர் சென்றுவிட்டனர்.
ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தாக்குதல்கள் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம்'' என்கிறார் அவர். போரில் தனது உறவு முறை சகோதரர் ஒருவரை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் பயத்தில் இருந்தார்கள். கொல்லப்படுவோம் என்ற அச்சம் காரணமாக, குடும்பங்கள் ஒன்றாக பயணிக்காமல் இருந்தனர்” என்றார் அவர்.
2009ல் போர் முடிவுக்கு வந்ததற்கு முன்னாள் ஏறத்தாழ 1,00,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதக் கொலைகளுக்கு இரு தரப்புமே காரணம் என்று 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டது. துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்குப் பாதுகாப்புப் படையினர் தான் காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. குழந்தைகள் மற்றும் பருவ வயதை தாண்டியவர்களை போரில் ஈடுபடுத்தியதாக விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது.
கௌரி ஒரு மாதத்துக்கும் மேலாகப் போரில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு இருதயக் கோளாறு இருப்பதாக விடுதலைப்புலிகளின் கமாண்டர்கள் அறிந்து, அவரை விடுவித்து விட்டனர். அதன் பிறகு இலங்கை ராணுவத்திடம் அவர் தஞ்சமடைந்துவிட்டார்.
- போராளியின் மனைவியாய் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி
- இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவரான தமிழரின் கதை
அரசு மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளிகளில் கௌரியும் ஒருவர்.
பிரிவினைக்கான கோரிக்கை குறித்து திருப்தி அடைந்திருந்தபோதிலும், சிங்களர்களுடன் காலத்தைக் கழித்தபோது, அவர்கள் “மனிதாபிமானிகள்” என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இறுதியில் அவர் மக்கள் பாதுகாப்புத் துறையில் சேர்ந்தார்.
வடக்குப் பகுதியில் சமுதாய மக்களுக்கு அளிப்பதற்காக வேளாண் பண்ணைகளை அதிகாரிகள் உருவாக்கினர். அவற்றில் ஒன்றான – உடயன்கட்டு – பகுதியில் தான் தன்னுடைய எதிர்கால கணவரை கௌரி சந்தித்தார்.
2013ல் கௌரி அங்கே பணியமர்த்தப்பட்ட போது, ரோஷன் அங்கு ஏற்கெனவே ஓராண்டாக இருந்து வந்தார். தமிழ் பேசும் மக்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் அவருடைய நிலை பரிதாபகரமாக இருந்தது.
அவருக்கு மொழி பெயர்த்துக் கூறிய, கௌரியுடன் பணியாற்றியது, அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட்டது.
அவர் தனிமையாக உணர்ந்திருக்க வேண்டும்'' என்கிறார் கௌரி.
அவர் நன்றாக இருக்கிறார் என்பதை உணர்த்த விரும்பினேன். எனவே வீட்டில் சமைத்த உணவை அவருக்கு எடுத்துச் செல்வேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
வெகு விரைவிலேயே அவர்களுடைய உணர்வுகள் தெளிவாகிவிட்டன.
“அவருடைய அம்மாவைக் காட்டிலும் அதிகமாக அவரை நான் நேசிப்பதாகக் கூறினேன்” என்று கௌரி கூறினார்.
நான் விடுமுறையில் சென்றபோது கௌரி அழுதிருக்கிறார்'' என்றார் ரோஷன்.
வாழ்க்கைக்குத் தேவையான பணம் என்னிடம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய கௌரி விரும்பியிருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.
தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தியபோது, எதிர்ப்புகள் இருந்தன. “சிங்களப் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீ ஏன் தமிழ்ப் பெண் மீது நாட்டம் கொண்டிருக்கிறாய்?” என்று ரோஷனின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.
ரோஷனின் தாயார் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னர் ஈடுபட்டிருந்த கௌரியின் சகோதரியும் இதை எதிர்த்திருக்கிறார். சிங்களரை மணப்பது, தமது சமுதாயத்தில் இருந்து கௌரியை பிரித்துவிடும் என்றும், கௌரியை அவர் துன்புறுத்துவார் என்றும் அவர் கருதியிருக்கிறார்.
இருவரும் பாசம் மற்றும் மரியாதை காட்டுவதைப் பார்த்து இரண்டு தரப்பு குடும்பத்தினரும் மனம் மாறியிருக்கின்றனர்.
“கடைசியாக நல்லது நடந்தது” என்கிறார் கௌரி. செனுலி சமல்கா பிறந்ததில் ரோஷனின் தாயார் மகிழ்ச்சி அடைந்தார் என்கிறார் கௌரி. ரோஷனின் தாயார் இப்போது காலமாகிவிட்டார்.
“எங்களுடைய இளைய தேவதை எங்களை இன்னும் நெருக்கமாக்கிவிட்டாள்” என்கிறார் கௌரி.
இப்போதெல்லாம், தம்பதியினராக தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்வதாக கௌரி தெரிவித்தார். தன் சகோதரிக்கு “பிடித்தமான சகோதரராக” ரோஷன் மாறிவிட்டார் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஜோடிக்கு 2014ல் திருமணம் நடைபெற்றது. செனுலி சமல்காவை இந்து மற்றும் புத்த கோவில்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களைப் பொருத்த வரை பிரிவினை என்பது கடந்த கால விஷயமாகிவிட்டது.
இருந்தபோதிலும், 250 பேர் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் வெடித்த நிலையில், நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தொடங்கிவிடுமோ என்று இந்தத் தம்பதியினர் அஞ்சுகின்றனர்.
ஒரு போரில் ஒரு தரப்பு மக்கள் மட்டும் மரணிக்கிறார்கள் என்பது அல்ல'' என்கிறார் கௌரி.
இனம் அல்லது மதம் வித்தியாசமின்றி நிறைய பேர் கொல்லப்படுகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
“இன்னொரு போர் எங்களுக்கு வேண்டாம்” என்கிறார் கௌரி. -BBC_Tamil