நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சிங்கள மக்களும் பிக்குகளும் இணைந்து ரகளை!

சர்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் பௌத்த பிக்குகளும் தென்பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட  சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம்  இன்று (16)இடம்பெற்றது, அதாவது  பிள்ளையார் ஆலய வளவில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள  குருகந்த ரஜமஹா விகாரையின் பெயர் தாங்கிய பெயர் பலகை வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் அனுமதி பெறப்படாது அமைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸாரும் வீதி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து குறித்த பெயர் பலகையை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அகற்றியிருந்தனர். இவ்வாறு பெயர்ப்பலகை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று  இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது .

தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் அழைத்துவரப்பட்ட பௌத்த பிக்குகளும் மூன்று பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களும் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள குருகந்த ரஜமஹா விகாரையில் முன்னதாக பொசன் வழிபாடுகளை மேற்கொண்டதோடு சத்தியாகிரக போராட்டத்திலும் ஈடுபட்டனர் .

அத்தோடு அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகளால் உரையாற்றப்பட்டது . அதாவது இந்த பகுதியில் பிள்ளையார் ஆலய இருந்ததாக  தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் சில தமிழ் பயங்கரவாதிகளால் பிள்ளையார் ஆலயம் இருந்ததாக கூறி குழப்பம் ஏற்படுத்தப்படுவதாகவும்  அழைத்து வரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் தேரர்களால் உரையாற்றப்பட்டது .

தொடர்ந்து பெயர் பலகையை அகற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  பிக்குகளும் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர் . ஆர்ப்பாட் டத்தில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் அகற்றப்பட்ட பெயர்ப்பலகை வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் நாட்டப்படவேண்டும்  எனவும் அவ்வாறு நடத்தப்படாது விடத்து  வரும் விளைவுகளுக்கு தாம் பொறுப்பில்லை எனவும் எத்தனையோ சட்டவிரோத பெயர்பலகைகள் இருக்கும் நிலையில் அவற்றை அகற்றாதவர்கள் விகாரையின் பெயர்பலகையை அகற்றியது தவறு எனவும் தெரிவித்தனர் .

மேலும் இங்கே பிள்ளையார் ஆலயம் எதுவும் இருக்கவில்லை எனவும் இது ஒரு புராதன பௌத்த ஆலயம்  இது தமது ஆலயம் எனவும் சிங்கள மக்களின் உரிமைகளில் கைவைக்கவேண்டாம் எனவும் பௌத்த உரிமைகளை பறிக்கவேண்டாம் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கியுள்ள  நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு இனவாத கருத்துக்கள் பௌத்த பிக்குகளால் அழைத்துவரப்பட்ட மக்களிடத்தில் விதைக்கப்பட்டு அமைதிக்கு பங்கம்   ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள் இங்கே  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

-eelamnews.co.uk

TAGS: