தன்மீது சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தான் தவறு செய்தமை நிரூபனமானால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராகவே இருப்பதாகவும் கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவில் நேற்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட 8 மணிநேர விசாரணைகளுக்குப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் மூவரை நான் பாசிக்குடா ஹோட்டலில் சந்தித்திருந்தேன். இதுதொடர்பாக என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதேபோல், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான இன்பராசா என்பவர், நான் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கியதாக என்மீது முறைப்பாடு அளித்திருந்தார். இது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்றன.
அத்தோடு, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் தொடர்பாகவும் அதிகாரிகள் என்னிடம் விசாரணைகளை நடத்தினர்.
இனிமேல் எப்போது விசாரணைக்காக அழைப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. பெரும்பாலும், விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன்.
இந்த விசாரணைகள் முடிவடைந்தவுடன் பொலிஸ் மற்றும் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பாசிக்குடா, ஹோட்டலில் நான் சந்தித்தவர்கள் பயங்கவாதிகள் என்று பொய்யான பரப்புரைகள்தான் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இது முற்றிலும் பொய்யான கருத்தாகும்.
இது பொய்யான குற்றச்சாட்டு என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணையின் ஊடாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்கவே நான் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். எனவே, இத்துடன் என் மீதான விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.
எவ்வாறாயினும், என் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டையும் நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவை அனைத்தும் பொய்யானவையாகும். நான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை.
அப்படி தவறு செய்திருந்தால் எவ்வித தண்டனையையும் பெற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.
-eelamnews.co.uk