2017க்குப் பின் காத்தான்குடியில் சஹ்ரான் செய்த அட்டுழியங்கள்; பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட பொலிஸ் அதிகாரி!

2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது சஹரான் காத்தான்குடியில் வசிக்கும் காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்தான்குடியில் சில பிரச்சினைகள் இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கூறிய அவர்,

சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் காத்தான்குடியை விட்டு வெளியேறியதிலிருந்து அங்கு அமைதியான சூழலே நிலவின.

“2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நான் கடமைகளை பொறுப்பேற்ற காலத்தில் காத்தான்குடியில் எந்தப் பிரச்சினைகளும் இடம்பெறவில்லை.

ஆனால், அதற்கு முன்னரான காலத்தில், அதாவது சஹ்ரான் காத்தான்குடியில் வசிக்கும் காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்தான்குடியில் சில பிரச்சினைகள் இடம்பெற்றதை நான் அறிவேன்.

சஹ்ரான்தான் அந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமானவராவார். இன்னொரு பள்ளிவாசலுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால், 13 பேர் கைது செய்யப்பட்ட பின்னர், சஹ்ரான் காத்தான்குடியிலிருந்து வெளியேறிவிட்டார்.

பெற்றோல் குண்டொன்று மீட்கப்பட்டதையடுத்து இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், சஹ்ரான் நீதிமன்றில் ஒருமுறைக்கூட ஆஜராகவில்லை. ஊருக்கும் வரவில்லை.

ஒவ்வொரு தடவைகளும் கிராமசேவகர் மற்றும் அதிகாரிகள் ஊடாக நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

எனினும், அந்த பள்ளிவாசல் சர்ச்சைக்குப் பின்னர் அவர் ஊரைவிட்டு சென்றதையடுத்து மீண்டும் வரவில்லை.

அவர் வந்திருந்தால், நிச்சயமாக ஊர் மக்கள் பொலிஸில் அறிவித்திருப்பார்கள் என்பதையும் நான் இங்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

சஹ்ரான் அப்போது எங்கே வசித்துவந்தார் என்பதை எம்மால் கண்டுபிடித்துக்கொள்ள முடியாது போய்விட்டது.

சஹ்ரானும் அவருடைய தம்பியும்தான் ஊரைவிட்டு சென்றிருந்தார்கள். எனினும், கைது செய்யப்பட்ட 13 பேரும் மாத இறுதியில் பொலிஸ் நிலையம் வந்து கையெழுத்திடுவார்கள்.

ஏப்ரல் 17 ஆம் திகதி, மோட்டார் சைக்கிளொன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக, குறித்த காணியின் உரிமையாளர் முறைப்பாடு அளித்தார்.

நானும், குற்றப்புலனாய்வு அதிகாரியும் அங்கு சென்று பார்வையிட்டபோது, அது வெடிப்பு என்று தெளிவாக தெரியவந்தது.

நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலேயே அவர்கள் செயற்பட்டுள்ளார்கள். காத்தான்குடி பொலிஸ் வட்டாரத்தில் அவர்கள் செயற்படவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: