தமிழர்களின் பிரட்ச்சனைக்காக காலக்கெடு விதித்த தேரர்; அதிரும் முஸ்லிம்கள்!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது குறித்த கோரிக்கையை யூன் 21 ஆம் திகதியான நாளைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்னதாக தீர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் காலக்கெடு விதித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லீம்களுக்கு எதிராக தமிழ் மக்களை அணி சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர், கல்முனைக்கு இன்றைய தினம் நேரில் சென்று முஸ்லிம் – தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய நிலையில் இந்த காலக்கெடுவை விதித்திருக்கின்றார்.

எனினும் அத்துரலியே ரத்ன தேரரின் இந்தக் கோரிக்கைகளை நிராகரித்துள்ள முஸ்லிம் தரப்பு, இந்த விவகாரம் அரச பொது நிர்வாகத்துடன் தொடர்புடையது என்பதால் நிர்வாகம் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளே தலையிட்டு நிரந்தர தீர்வொன்றை காண வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு எதிரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் நான்காவது நாளாக தொடர்கின்றது.

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த – இந்து மதகுருமார்களினதும், உள்ளூராட்சி சபை தமிழ் உறுப்பினர்களினதும் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உணவுத் தவிர்ப்புப் போரர்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

சேனைக்குடியிருப்பில் இருந்து அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு பேரணி உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டும் இடத்தை சென்றடைந்தது.

கவனயீர்ப்பு பேரணியை மேற்கொண்டவர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

இதேவேளை தமிழர் தரப்பினரின் இந்த போராட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேரில் சென்று ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளுடன் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி அவர்களின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அத்துரலியே ரத்தன தேரர், அதனை அடுத்து முஸ்லீம் மக்களை முழுமையாக ஓரம்கட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

முஸ்லீம்களுக்கு எதிரான அவரது இனவாத நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களை இணைத்துக்கொள்வதற்காக வடக்கு கிழக்கிற்கு நேரில் விஜயம் செய்து ஆதரவு திரட்டிவரும் அத்துரலியே ரத்தன தேரர், கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பிரதான பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கையிலும் தலையிட்டிருக்கின்றார்.

முதலில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர் தர்ப்பை நேரில் சந்தித்த அத்துரலியே ரத்தன தேரர், பின்னர் முஸ்லீம் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். கல்முனை நகர பிதாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதனையடுத்து உணவுத் தவிர்ப்புப் போராட்ட களத்திற்கு திரும்பிய அவர், முஸ்லீம் பிரதிநிதிகள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறியதுடன், இது தமிழ் மக்களுக்கான பிரதேச செயலகம் அல்ல என்று தெரிவித்தார்.

ஜாதிக்க ஹெல உறுமய – நா.உ –“உப பிரதேச செயலகமாக இயங்கி வந்த இந்த பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் வலியுறுத்தினோம். அடுத்த விடையம் தமிழ் மக்களுக்கான பிரதேச செயலகம் அல்ல. இது அரசின் கீழ் இயங்கும் பிரதேச செயலகம். இங்கு பிரதேச செயலாளராக சிங்களவர் இருக்கலாம், முஸ்லீம் ஒருவர் இருக்கலாம். தமிழர் ஒருவர் இருக்கலாம். காணி உரிமை இருந்தால் அந்தக் காணிக்கு யார் வேண்டுமானாலும் உரிமை கோரலாம். பிரதேச செயலகமாக மாற்றப்படுவதால் காணி உரிமம் தொடர்பான பிரச்சனைகள் எழும் என்று கூறுவார்களானால் அந்த பேச்சுக்கே இங்கு இடமில்லை. அதனால் இந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டியது அவசியம் என்பதை தெளிவுபடுத்தினோம். அதற்கமைய அவர்களும் அதற்கு தடையாக இருக்க மாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்தனர். அதனால் இனிமேல் எல்லை நிர்ணயம் செய்வதாக கூறி ஆணைக்குழுக்களை அமைத்து நீண்டகாலம் கடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எமக்கு எல்லைகள் தெரியும். நிலப்பிரதேசம் மிகவும் சிறியது. அதேவேளை கூகூகள் வரைபடம் இருக்கின்றது. அதனால் நாளைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக இதனை தீர்க்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்”.

எனினும் எல்லை நிர்ணயம் செய்யப்படாத நிலையில், நிலத் தொடர்புகள் அற்ற பிரதேச செயலகமொன்றை உருவாக்குவதற்கு முஸ்லீம் தரப்பு இணங்காது என்று கல்முனை முஸ்லீம் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளில் ஒருவரான கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆரீப் சம்சூதீன் திட்டவடடமாக குறிப்பிட்டார்.

தமிழர் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக முஸ்லீம் தரப்பு ஆரம்பித்துள்ள கவனயீர்ப்புப் போராட்டக் களத்தில் வைத்து அத்துரலியே ரத்தன தேரருடனான சந்திப்பு தொடர்பில் முஸ்லீம் மக்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இந்தத் தகவலை கூறியதுடன், தமது இந்த நிலைப்பாட்டை அத்துரலியே ரத்தன தேரரிடமும் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் விவகாரம் அரச நிர்வாகத்துறையுன் தொடர்புடையது என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆரீப் சம்சூதீன், இந்த விடையங்களில் மதத் தலைவர்கள் தலையிட்டு தீர்வு காண முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் – முஸ்லீம் மக்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் தீவிரமடைந்துள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தும் விவகாரத்தை மையப்படுத்தி இரண்டு சமூகங்களும் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கல்முனையில் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

-athirvu.in

TAGS: