கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இரண்டு வாரத்துள் முழு அதிகாரங்களுடன் தரமுயர்த்தப்படும்; ரணில் உறுதி!

கிழக்கு மாகாணம், கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப் பிரிவை இரண்டு வாரங்களுக்குள் தரம் உயர்த்தும் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை மாலை இணக்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து அமைச்சர் மனோ கணேசன் பிரதமடன் தொடர்புகொண்டு பேசியபோதே இதனைத் தெரிவித்த பிரதமர், எதிர்வரும் திங்கட்கிழமை இதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கும் வகையில் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் உறுதியளித்திருக்கின்றார்.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை கல்முனைக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் தரப்பினரைச் சந்தித்துப் பேசினார்கள். இதன்போது 3 மாதங்களுக்குள் கல்முனையைத் தரமுயர்த்தும் செயற்பாடுகள் பூர்தி செய்யப்படும் என்ற உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டார். அதனை ஏற்கமறுத்த கூட்டத்தினர், சுமந்திரனைப் பேசவிடாது தடுத்தனர். கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதன்பின்னர் அமைச்சர் மனோ கணேசன், பிரதர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கல்முனையில் காணப்படும் நிலைமையை விளக்கினார். 3 மாத கால அவகாசத்தை ஏற்பதற்கு தமிழ்த் தரப்பினர் மறுப்பதையும், அங்கு காணப்படும் கொந்தளிப்பான நிலை குறித்தும் தெரிவித்தார். இதனையடுத்தே இரண்டு வார காலப்பகுதியில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொடுப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

-4tamilmedia.com

TAGS: