அரசியல் ரீதியாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள தமிழ்ப் பிரதிநிதிகளை அரசாங்கம் பணம்கொடுத்து வாங்கியுள்ளதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களோ தமிழ் பிரதிநிதிகளோ எதுவும் செய்யமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போரினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள மக்கள் நலன் காப்பகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உதவிகளை வழங்கி வைத்தார்.
அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “எமது மக்களை யுத்தம் எனும் பெயரில் அவர்களின் உடமைகளை உறவுளை அழித்து ஏதிலியாக்கியமைக்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அவர்களுக்கான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் .
இவை குறித்து அரசுடனும் சர்வதேசத்துடனும் பல வழிகளிலும் பேசிய போதிலும் அவை அனைத்தும் பயனற்று போய்விட்டது.
அரசியல் ரீதியாக நன்மை பெறவே அரசு முயற்சிக்கிறது. அதற்கமையவே தமிழ்ப் பிரதிநிதிகளை அரசாங்கம் பணம்கொடுத்து வாங்கியுள்ளது” என தெரிவித்தார்.
-tamilcnn.lk