‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்கள்

அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர், 1990-ம் ஆண்டு, ராமேஸ்வரத்துக்கு வந்தனர். பின்னர், தீவிர விசாரணைக்குப் பின் இங்கே உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை, ஆனைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு, மேட்டமலை ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில், சுமார் 500 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்நிலையில், தாங்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை. எனவே, இந்தியக் குடியுரிமை வழங்கி எங்களுக்கும் இந்தியர்களைப்போல அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து செவலூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த வசந்தன் என்பவர் கூறும்போது, “இலங்கையில் இருந்து 1990-ம் ஆண்டு இராமேஸ்வரம் வந்தோம். அப்போது எனக்கு 7 வயது. பின்னர் அங்கே இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு வந்தோம். தற்போது 35 வயது ஆகிறது. இங்கே மட்டும் 80 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ரேஷன் கடையில் எங்களுக்கு தனி அட்டை வழங்கப்படுகிறது. அங்கே அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட குடும்பத்துக்குத் தேவையான பொருள்கள் கிடைக்கும். ஆனால், எங்கள் முகவரிக்கான ஆதாரமாக ரேஷன் அட்டையைப் பயன்படுத்த முடியாது. ஓட்டுரிமை இல்லை. இருசக்கர வாகனம் வாங்கவோ, சொத்து வாங்கவோ முடியாது.

வசந்தன்

இங்கே இருந்து கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்திவருகிறோம். தற்போது இலங்கை சென்றால், நாங்கள் புது வாழ்க்கையைத்தான் தொடங்க வேண்டும். நாங்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை. எனவே,  எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

வீரரத்தினம் என்பவர் கூறும்போது, “தமிழ்நாட்டுக்கு வந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேதான் வசித்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் இங்கேதான் படிக்கிறார்கள். ஆனால், குடியுரிமை இல்லாததால் படித்து முடித்து வேலைக்குச் செல்ல போராடவேண்டியுள்ளது. இங்கே வந்ததில் இருந்து ஒருமுறைகூட இலங்கை செல்லவில்லை. பல கண்காணிப்புகளுக்கு மத்தியில்தான் வசித்துவருகிறோம். யாராவது முக்கியத் தலைவர்கள் இங்கே வந்தால், எங்களுக்கு வெளியே செல்லக்கூட அனுமதி இல்லை. ஒரு சில ஆண்டுகள் ஊரைவிட்டு வெளியே சென்றாலே ஊரின் அடையாளம் மாறிவிடும்.

வீரரத்தினம்

கால் நூற்றாண்டு கழித்து மீண்டும் இலங்கைக்குச் சென்றால், எங்களால் வாழ்க்கை நடத்த முடியாது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். பொருளாதார ரீதியாக கடும் சிரமங்கள் ஏற்படும். எனவே, எங்களுக்கு இந்தியக் குடியுரிமை மட்டும் கிடைத்தால் போதும். நாங்கள் இங்கேயே நிம்மதியாக வாழ்ந்துவிடுவோம்” என்றனர்.

-eelamnews.co.uk

TAGS: