ரணில் கூட்டமைப்பை நம்பவில்லை: செல்வம் அடைக்கலநாதன்

வவுனியா பாலமோட்டையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக செயற்பட்டிருந்தது. ஆனால் இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பினராகிய எங்கள் எல்லோரையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்.

எமது பேச்சுக்களின் ஊடாக ஒரு கணக்காளரை நியமிப்பதற்கான கடிதங்களை தற்போதைய அமைச்சராக இருப்பவர் அரச அதிபருக்கு அனுப்பி அதனை நடைமுறைப்படுத்தும் நிலை காணப்படும் போது மீண்டும் அதனை இரத்துச் செய்கின்ற செயற்பாட்டை செய்திருக்கின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்டிருக்கின்ற அரசாங்கம் கூடுதலாக முஸ்லீம் அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக எனது கணிப்பில் தெரிகின்றது. அவர்கள் அமைச்சராவையில் இருக்கின்ற காரணத்தால் அவ்வாறு இருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுவான நோக்கம் இந்த அரசியல் தீர்வு கிடைக்கப்பட வேண்டும் என்பதில் மிக ஆளுமையோடு செயற்படும். அதே நேரத்தில் கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதில் முழுமையாக செயற்பட்டிருந்தோம். தற்போது காலம் மிக கனிந்திருக்கிறது. அந்த வகையில் நாம் ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதாவது கல்முனை விடயம் மட்டுமல்ல எமது அரசியல் தீர்வு விடயமாகவும் சிந்திக்க வேண்டும்.

அது நம்பிக்கையில்லா தீர்மானம் வருகின்ற போது இந்த அரசங்கத்தோடு எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் முடிவெடுக்கவேண்டும். அந்த முடிவை அறிவிக்க வேண்டும். இந்த விடயங்களின் ஊடாக சில விடயங்களை நாம் சாதிக்கலாம் என எண்ணுகின்றேன். இந் நிலையில் பிரதமராக இருக்கலாம் ஜனாபதிபதியாக இருக்கலாம் தமிழ் தரப்பினர் தம்மோடு நிற்கமாட்டார்கள் என்ற சந்தேகத்தோடு செயற்படுகின்றனர்.

நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதே அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கேயாகும். கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் நான் கல்முனை விடயம் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுக்காமையால் நான் நடுநிலமை வகித்திருந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் நான் மட்டுமே இந்த முடிவை எடுத்து செயற்பட்டவன்.

ஆகவே இனியாவது நாங்கள் சந்தர்ப்பங்களை பயன்படுத்தவேண்டும். ஏற்கனவே சில விடயங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருந்தாலும் தற்போது இருக்கின்ற சந்தர்ப்பத்தினையும் பயன்படுத்தாது விட்டால் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கையற்றுப்போகும் வாய்ப்பு முழுமையாக ஏற்படும். ” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: