பௌத்த – இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்?

கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன.

இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த – இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப் பொது எதிரியாகக் காணுவதையும் கோருகிறது.

கிழக்கு மாகாணத்தில் புதியதொரு வகைப்பட்ட பிரிவினையையும் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படைவாதிகளும் ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற பொதுத்தளத்தில் ஒன்றுசேர்கிறார்கள். அவர்கள், தமிழ் மக்களையும் அதேதளத்தில் ஒன்றுபட வைப்பதன் மூலம், தமிழ் மக்களைப் பிரிக்கிறார்கள்.

கிழக்கில் இந்துத்துவா சக்திகளின் ஆதிக்கம் மெதுமெதுவாக அதிகரித்து வருகிறது. இது ‘இந்து’ அடையாளத்தை முன்னிறுத்துகிறது. அதன் மூலம், திட்டமிட்டே ‘தமிழ்’ அடையாளத்தைச் சிதைத்து, தமிழர்களைப் பிரிக்கும் வேலைத்திட்டம் அரங்கேறுகிறது. இதன் ஆபத்துகள் உணரப்பட வேண்டும்.

கல்முனையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக, பௌத்த துறவிகளின் வருகையைத் தமிழ் மக்களுக்கான ஆதரவாக இல்லாமல், இந்துக்களுக்கான ஆதரவாகப் பார்ப்பது அவசியம். கல்முனையில் உரையாற்றிய அத்துரலியே ரத்தின தேரர், “எமது போராட்டம் அஹிம்சைப் போராட்டம்; இனி எக்காலத்திலும் தமிழர் சிங்களவர்களிடையே, போர் ஒன்று மூள இடமளிக்க மாட்டோம்; இந்துக் கடவுளர்களுக்கு புத்த பகவானுடன் இருக்க முடியுமாயின், ஏன் எம்மால் இருக்க முடியாது. அவர்கள் உலகில் பெரும்பான்மையினராக இருக்கலாம். ஆனால், இலங்கையில் புத்தரும் பிள்ளையாரும் தான் பெரும்பான்மையினர்” என்றார். இந்த உரை அடங்கிய காணொளி, சமூகவலைத்தளங்களின் ஊடாகப் பரவியது.

இந்த உரையைத் தமிழ்-சிங்கள ஒற்றுமையின் அடையாளமாகப் பார்ப்பவர்கள், இதே பௌத்த துறவிகள்தான், தமிழ் – சிங்கள ஒற்றுமையை வலியுறுத்திய பல நிகழ்வுகளில், குழப்பம் விளைவித்தார்கள். அத்துரலியே ரத்ன தேரர் ஒன்றும் விதிவிலக்கல்ல. தேரரின் பேச்சை நன்மையாகப் பார்ப்பவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிரை பற்றியும் அரசியல் கைதிகள் விடுதலை பற்றியும் இவரது நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும்.

இன்னோர் அரசியல் ஆட்டத்துக்காக, கல்முனை மக்களின் போராட்டம் திசை திருப்பப்படுகிறது. கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு, முழுமையான பிரதேச செயலகமாக செயற்படுவது, அங்குள்ள மக்களின் தேவைகளுக்கும் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கும் அரசாங்க நிர்வாகப் பரவலாக்கத்துக்கும்  அவசியமான ஒன்றாகும்.

இதைப் புரிந்து செயற்படுவது அவசியம். நீண்டகாலமாகப் பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் தமிழ் மக்கள், இன்று அதே ஒடுக்குமுறைக்கு மிகவும் மோசமான வகையில் உள்ளாகி நிற்கும் முஸ்லிம் மக்களோடு முரண்பட்டு, குறுகிய இன, மத, பிரதேச அடிப்படைகளிலான பிரிவினைச் சிந்தனையுடனும் செயற்படுவது, இருவருக்கும் பயன்தராது.

ஆண்டாண்டு காலமாகச் ‘சிங்களவர்களை நம்ப இயலாது’ என்று சொல்லி வந்தவர்கள், ஓரிரவில் சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை மீட்பது பற்றிப் பேசுவது, கேலிக்கூத்தாக உள்ளது. இன்று, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று காணி அபகரிப்பு. இதைச் சிங்களப் பேரினவாதம், எமது வரலாறெங்கும் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளது. இந்தப் பின்புலத்தில், ஞானசார தேரரை மீட்பராகப் பார்க்கும் மனோநிலை எவ்வாறு உருவானது என்பது கேள்விக்குரியது.

ஒருபுறம் இந்துத்துவ சக்திகளின் துணையுடன் இந்து அடிப்படைவாதம் இலங்கையின் வடக்கு, கிழக்கில் காலூன்றுகிறது. அது தனது காலூன்றலுக்கு வாய்பான அனைத்தையும் பயன்படுத்துகிறது. அதில் ஒருபகுதியே, இப்போதைய பௌத்த-இந்து ஒற்றுமை.

சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம், இன்று கிழக்கில் தமிழர்களுக்கு நீட்டும் ஆதரவுக்கரம் அடுத்த தேர்தலை நோக்காகக் கொண்டது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து, எதிர் நிலைப்பாடுடையவர்கள் முஸ்லிம் எதிர்ப்பு என்பதன் பெயரால் நீட்டும் கரங்கள் கொடியவை; ஆபத்தானவை; நீண்டகால நோக்கில் எமக்கு எதிராகவே செயற்படக் கணப்பொழுதும் தயங்காதவை; இதை நாம் விளங்க வேண்டும்.

இன்று கோரப்படும் பௌத்த – இந்து ஒற்றுமை மனித நேயத்தின், நீதியின், நியாயத்தின் அடிப்படையிலானதல்ல. தமிழ் மக்களுக்கு தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. அதையெல்லாம் புறந்தள்ளி, மதத்தின் பெயரால் ஏனைய மதப்பிரிவினருக்கு எதிரான ஒற்றுமையை, ஒற்றைப் பரிமாணத்தில் கட்டமைப்பது மக்கள் நலன் சார்ந்ததல்ல. கோரப்படும் ஒற்றுமை இன்னும் நீண்டகாலத்துக்கு மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து வைத்திருக்குமேயன்றி வேறெதையும் செய்யாது.

பௌத்த – இந்து ஒற்றுமையைக் கோருவோர் யார் என்பதை உற்றுநோக்கின், அவர்களின் நோக்கங்களை விளங்குவதில் சிரமங்கள் இரா.

-tamilmirror.lk

TAGS: