‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும் சம்பந்தப்படுத்தி, நண்பர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு அவரது நண்பர், கல்முனை விவகாரம் உக்கிரமடைய நாங்களும் காரணம் அல்ல; புத்த பிக்குகளும் காரணமல்ல; எமது அரசியல்வாதிகளும் இனவாத முஸ்லிம்களுமே காரணம் என்று விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார்.
ஆனால், கல்முனை விவகாரத்தில், ‘நிலத் தொடர்பற்ற’ என்ற பதம், மிகப் பெரிதாகவே பேசப்படுகிறது. நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு என்ற எண்ணக்கருவின் பிதாமகர் மர்ஹூம் அஷ்ரப் என்பதை, அவரது புதல்வர்களே வசதியாக மறந்து விட்டனர்.
அஷ்ரப் விதைத்த ‘வினை’யின் அறுவடை, வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஆனால், களம் ஒன்றுதான்; காட்சி மட்டும் மாறி உள்ளது.
‘மத நல்லிணக்கம் நல்லது’ தான்; ஆனால், ஒரு மதத்தினரை, ஒதுக்கி வைத்துக் கொள்வது அல்லது ஒதுக்கி வைப்பதற்கு மதத்தைப் பயன்படுத்துவது மிகப் பிழையானது.
ஆக்கிரமிப்பையும் அடாவடித்தனத்தையும் நமது நாட்டில், ஒழித்து வைத்துவிட முடியாது என்பதற்குக் கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம், நல்லதோர் உதாரணமாகும்.
நிலத்தொடர்பற்ற முறையில் அல்லது முழுமையான தொடர்புடன் 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒன்பதாயிரத்தைத் தாண்டிய குடும்பங்களைக் கொண்ட 33ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் மூவாயிரத்தைத் தொட்ட முஸ்லிம்களுடன் இந்து ஆலயங்கள் 45, தேவாலயங்கள் 12, பள்ளிவாசல்கள் 03, விகாரை 01 ஆகியவற்றைக் கொண்டதுதான் கல்முனைத் தமிழ் பிரிவு உபபிரதேச செயலகப்பிரிவு ஆகும்.
இந்தக் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகம், 1989 தொடக்கம் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி, 1993ஆம் ஆண்டு முதல் இற்றை வரை உபபிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது.
ஆனால், காணி, நிதி போன்ற அதிகாரங்களை வழங்குவதற்கு முஸ்லிம் தரப்பால் சொல்லப்படும் நியாயம், வெறும் இனவாதத் தனமானதாகவே தோன்றுகிறது.
அதாவது, தம்முடைய பிரதான வர்த்தக நகரமான கல்முனை நகரம் பறிபோய்விடும் என்ற அச்சமே அதற்கான காரணமாக உள்ளது என்றே தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக அங்கிகரிப்பதற்கு இவ்வாறு தடைபோடும் கைங்கரியங்கள், பலகோணங்களிலும் சந்தேகக் கிரகணங்களையே கௌவிக் கொள்கிறது.
ஏற்கெனவே, 1993இல் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்திருப்பதால், முழுமையான அதிகாரங்கள் கொண்ட பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு, மூன்று மாதங்கள் அவகாசம் அவசியமற்றது. 29 கிராமசேவகர் பிரிவுகள் அடங்கலான பிரதேசம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதைத்தான், கல்முனைத் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் விரும்புகிறார்கள். இவ்வாறு, அதிகாரத்தை வழங்குமாறு கேட்பது, இனவாதமோ அடிப்படைவாத அடக்குமுறையோ அல்ல.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று, தலதா மாளிகையில் உண்ணாவிரதமிருந்த வேளை, அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் இராஜினாமாச் செய்தமையானது, ‘காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதை’ ஆகத்தான் மாறிப்போயுள்ளது.
ஆனால், முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாக்களுக்கும் கல்முனைத் தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக விடயத்துக்கும் தொடர்பு குறைவுதான். ஆனால், ‘யாரோ எதையோ சொல்லி, அதற்காக ஓர் உண்ணாவிரதத்தை நடத்தி, வெற்றி பெறவேண்டும் என்று, ஒரு முன்னெடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விடயம், உண்ணாவிரதம் இருந்து சாத்தியப்படுத்தும் ஒன்றல்ல என்பதனை, அவர்கள் மறந்து விட்டிருந்தார்கள்.
தமிழ்ப் பத்திரிகைகள், ஏனைய ஊடகங்கள் எல்லாவற்றிலுமே முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமிழ்த் தரப்புகளுக்கு ஆதரவாகவும் தான், கல்முனை தமிழ்ப்பிரிவு செயலக விவகாரம் எழுதப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கும் அவர்களது நியாயத்தைச் சொல்வதற்குச் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அது அடிப்படைவாதமாகவும் இனவாதமாகவும் இல்லாதவரையிலும் சிறப்பு.
இப்போது, உண்ணாவிரதத்தால் வெளிப்படையாகத் தெரியாததும் மிகப்பெரியதொரு பிரச்சினையாகவும், தமிழ் மக்கள் மீது, முஸ்லிம்களுக்கிருக்கும் எதிர்ப்புணர்வு வெளியே எடுத்து விடப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, தமக்கு அதிகமான ஆசனங்கள் இருந்தும் குறைவான ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் தரப்புக்கு, முதலமைச்சையும் இரண்டு அமைச்சையும் கொடுத்துவிட்டு, வெறும் இரண்டு அமைச்சுகளை மாத்திரம், கடந்த கிழக்கு மாகாண சபையில் ஏன் பெற்றிருந்தது.
வடக்கு மாகாண சபையில், தமக்குக்கிடைத்த ‘போணஸ்’ ஆசனத்தை, முஸ்லிம் ஒருவருக்கு ஏன் கொடுத்தது, அந்த நபர்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இறுதிவரை பிரச்சினையாகவும் இருந்தார் என்பது வேறுகதை.
இவ்வாறு, பெருந்தன்மையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காண்பித்தபோதும், இன்னமும் கடைப்பிடிக்கின்ற போதும், வெறும் ஒரு பிரதேச செயலகத்துக்கு அதிகாரத்தைக் கொடுப்பதற்கு அவர்கள் ஏன் பின்நிற்கிறார்கள் என்பதுதான், பொருந்தாத்தன்மையாகக் காணப்படுகின்றது.
உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட போதிலிருந்து, தமக்கு ஆதரவு தேடும் தனிநபர்களும் கட்சிகளும் தம்மை உண்ணாவிரதப் போராட்டத்துக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வழமை போன்று தம்முடைய உட்தரப்பு வேலைகளைத்தான் மேற்கொண்டது. ஏதோ ஒன்று நடைபெற்ற பின்னர், அமைச்சர் மனோ கணேசனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் சம்பவ இடத்துக்கு வந்தார்கள், தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கமும் அவர்களுடன் இணைந்திருந்தார். பிரதமரின் முடிவைச் சொன்னார்கள். ஆனால், பெரும் குழப்பம் ஏற்பட்டு, வன்முறை போன்றதொரு சூழ்நிலை உருவாகி விட்டிருந்தது.
தங்களுடைய முழுக் கோபத்தையும் தமிழ் மக்கள் காண்பித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கான ஜனநாயகம் அங்கிருந்தது. ஆனால், அப்போது தம்முடைய உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளாதவர்கள், பொது பலசேனாவின் ஞானசார தேரர் வந்து சொன்ன போது, முடித்துக் கொண்டமை, ஒருவித ஆரோக்கியமற்ற நிலையை உருவாக்கியிருந்தது.
இதிலுள்ள அரசியல், என்ன என்பதுதான் கேள்வி. அப்படியானால், ஏதோ ஓர் அரசியல் சித்து விளையாட்டு நடக்கிறது. ஏன், கல்முனை விவகாரத்தில், ஜனாதிபதி எதையும் பேசாமலிருக்கிறார் என்பதும் சந்தேகம்தான்.
பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இனவாதிகள், தமிழர்களை அழிப்பதற்கும் அடக்குவதற்கும் வெளிப்படையாகவே முஸ்லிம்களைப் பயன்படுத்தினார்கள். இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழர்களைப் பயன்படுத்துகிறார்கள். இது, எரிகின்ற நெருப்பில், மேலும் எண்ணெய் ஊற்றும் செயலாகவே கொள்ளவேண்டும். ஆனால், முஸ்லிம்கள் வெளியே சொல்லும் ‘பூசி மெழுகல்’ இதில் எடுபடவில்லை என்பதுதான் சுவாரசியம்.
எது அப்படியிருந்தாலும், உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதால், முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்று சொல்லும் முஸ்லிம் தரப்பு, ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்குச் சொல்லும் காரணம் பலவீனமானதுதான். காணிகள், மதரசாக்கள், பள்ளிவாசல்கள், பிரதான வர்த்தக வியாபார நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், நீர்வளங்கள் அனைத்தும் இந்தப்பிரிவுக்குள் வந்து விடுகின்றன. இவ்வாறு, முஸ்லிம்களின் பல்வேறுபட்ட நிலம் தொடர்பான பிணக்குகள், பூர்வீகமாக ஆண்டு வந்த பிரதேசங்கள் அத்தனையும் உள்வாங்கிய பிரதேச செயலகமாக கல்முனைத் தமிழ்ப் பிரதேச சபை அமைகிறது. திணிப்பதும் பிரித்துத் தருமாறு வற்புறுத்துவதும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் முஸ்லிம் தரப்பினருடைய ஆதங்கம்.
இதனைச் சரியென்றே வைத்துக் கொள்வோம். நிலப்பரப்பு விடயத்திலுள்ள கல்முனை பிரதேச செயலகத்துக்கு 38 சதவீத நிலப்பரப்பும் கல்முனைத் தமிழ்ப் பிரிவுக்கு 62 சதவீதமும் என்பதில், 38 சதவீத நிலத்தில் ஒரு சதவீதமேனும் தமிழர்களுக்குண்டா என்பதும், 62 சதவீதக் காணியில் எத்தனை சதவீதம் தமிழர்களுக்குச் சொந்தம் என்பதும் முக்கியமான ஒரு கேள்வி.
இதற்குப் பதில் கண்டால், தமிழர்களது பிரதேச செயலக எல்லைக்குள் முஸ்லிம்கள் இருப்பது, ஏன் பிரச்சினையாகும்? முஸ்லிம்கள் தனியாகத்தான், இருக்க வேண்டுமா என்ற கேள்விகள் தோன்றும்.
புதிதாக அறிவிக்கப்பட இருக்கின்ற எல்லை நிர்ணயக்குழு அறிக்கையில், பல தமிழ்க் கிராமங்கள், முஸ்லிம் பிரிவுகளுடன் இணைத்ததாகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போது, வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும், முஸ்லிம் பிரிவுகளுடன் தமிழ்க் கிராமங்கள் இருக்கக்கூடாது என்று, போராட்டம் நடத்துவதா என்ற மற்றொரு கேள்வியும் தோன்றாமல் இருப்பது, இரண்டு இனங்களின் சுபீசமான எதிர்காலத்துக்கு நல்லது.
ஆனாலும், தொடக்கத்தில் சொன்ன குறளுக்குரிய விளக்கமான ‘ஒருவன் தன் நெஞ்சம் அறியப் பொய்ச் சொல்லக்கூடாது; பொய் சொன்னால் அதைக் குறித்து அவன் நெஞ்சமே அவனை வருத்தும்’ என்பதே, காலத்தின் பதிலாக இருக்க வேண்டும். இந்தச் சட்டையை அளவானவர்கள் எல்லோரும் போட்டுக் கொள்ளலாம்.
(இலட்சுமணன் )
-tamilmirror.lk