இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்ப்பட்டன; ஆதாரங்கள் இருக்கின்றன!

சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி சிவசந்திரன், சர்வதேச ரீதியில் யுத்தங்களின் போது பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பயன்படுத்தப்பட்டதற்கான சாட்சிகளும் இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் மாத்திரம், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், போர் குற்றங்களும், கொடூரமான மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையும் அறிக்கையிட்டிருக்கின்றது.

இந்த நிலையில் இறுதிகட்ட போரின் போது இடம்பெற்ற கொடூரங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திவரும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் அதற்காக சிறிலங்கா அரசாங்கத்தையும் இணைத்துக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றையும் நிறைவேற்றியுள்ளது.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய போர் குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்காது தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

இந்த நிலையில் இறுதிக்கட்ட போரின் போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் என அழைக்கப்படும் கொத்து குண்டுகளையும், இரசாயண ஆயுதங்களையும் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தியதாக முன்னாள் போராளிகளும், போரில் உயிர் தப்பிய பொதுமக்களும் கூறி வருகின்றனர்.

இந்தத் தகவல்களை சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு, உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதி ஆணைக்குழுவிடமும் போரில் உயிர்தப்பிய தமிழ் மக்களும், முன்னாள் போராளிகளும் சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக முறையிட்டிருந்தனர்.

அதேபோல் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஜெனீவா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் முத்தெட்டுவேகம ஆணைக்குழுவிடமும் இந்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கள மஹிந்த ராஜபக்சவும் அவரது கடந்த ஆட்சியும் நிராகரித்தது போல் தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கமும் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர்களில் ஒருவரான சரோஜினி சிவச்சந்திரன், இறுதிக்கட்ட போரின் போது இரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சாட்சிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: