வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார்.
ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணம்.
“அமைதிக்காக அவர்கள் இருவரும் கைக்குலுக்குவர்,” என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தும் முன்னதாக தெரிவிக்கவில்லை. வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுத்தல் குறித்தான நின்று போன பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின் மூலமாக மீண்டும் தொடரும் என நம்பப்படுகிறது.
ஒரே வருடத்தில் டிரம்பும் கிம்மும் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொள்கின்றனர்.
என்ன பேசினார்கள்?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடந்தது.
அப்போது, இரு நாடுகளுக்கிடையே மீண்டும் அணுஆயுத பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான குழுவை நியமிப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
“மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடத்தில் உங்களை பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று கூறிய கிம்மை பார்த்து, “மிக முக்கியமான தருணம் இது… மிகப்பெரிய முன்னேற்றம்” என்று டிரம்ப் பதிலளித்தார்.
அதுமட்டுமின்றி, “கடந்த காலத்தை மறந்துவிட்டு, புதிய எதிர்காலத்தை நோக்கி பயணத்தை தொடங்குவதற்கு இதன் மூலம் டிரம்ப் வித்திட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன்” என்று கிம்மும், “இது உலகத்துக்கு மிக முக்கியமான நாள்” என்று டிரம்பும் தெரிவித்தனர்.
பின்னர், ஒருவரையொருவர் தத்தமது நாட்டின் தலைநகரத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துக் கொண்டனர்.
ட்விட்டரில் டிரம்ப் விடுத்த அழைப்பை “சுவாரஸ்யமானது” என வடகொரியா தெரிவித்திருந்தது.
முன்னதாக தென்கொரிய தலைநகர் சோலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கிம்மிற்கும் தனக்கும் இடையே நல்லதுதொரு உறவு வளர்ந்திருப்பதாகவும், அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்
“அந்த சந்திப்பு மிகவும் குறைந்த நேரத்துக்குதான ஒரே ஒரு கைக்குலுக்கல். இருந்தாலும் பரவாயில்லை. ஒரு கைக்குலக்கலுக்கு பல அர்த்தங்கள் உண்டு.” என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
- வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?
- வட கொரிய அதிபர் கிம்மிற்கு டிரம்ப் எழுதிய ’அழகிய’ கடிதம்
இந்த அழைப்பு திட்டமிட்ட ஒன்று அல்ல என்று ஒப்புக் கொண்ட டிரம்ப், தென்கொரியாவுக்கு வந்தவுடன் சிறிது நேரம் கிம்மை பார்த்து செல்ல விரும்பியதாக தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் மற்றும் வடகொரியாவுக்கு இடையே இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு பயணம் செய்யவிருந்தார் டிரம்ப். ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
பிப்ரவரி மாதம் வியட்நாமில் உள்ள ஹனோயில், இருநாட்டு அதிபர்களும் சந்தித்ததிலிருந்து வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் சுமூக நிலை இல்லை.
வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவது தொடர்பான இரண்டாவது பேச்சுவார்த்தை எந்தவித ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்தது.
வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிட வேண்டும் என அமெரிக்கா தெரிவிக்கிறது. தங்கள் நாட்டீன் மீது விதிக்கப்பட்ட தடைகளை விலக்க வேண்டும் என வடகொரியா கேட்கிறது.
ராணுவம் விலக்கப்பட்ட பகுதி
4 கிமீ அகலத்தில் 250 கிமீ தூரத்துக்கு இந்த பகுதி உள்ளது. 1953ஆம் ஆண்டு கொரிய போரின் முடிவுக்கு பிறகு தென் மற்றும் வடகொரியாவை இந்த பகுதி பிரித்து வருகிறது.
ராணுவம் விலக்கப்பட்ட பகுதி என்று குறிப்பிடப்பட்டாலும், அதனை தாண்டியுள்ள பகுதி உலகிலேயே அதிகப்படியான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள ஒரு எல்லை பகுதியாகும்.
ராணுவம் விலகப்பட்ட பகுதியின் இருபுறமும் உள்ள கூட்டு பாதுகாப்பு பகுதியில் தான் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும்.
இதுவரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இந்த பகுதிக்குள் வந்ததில்லை. பில் கிளிண்டன் ஒருமுறை “இந்த பூமியில் மிகவும் பயங்கரமான ஓர் இடம்,” என இந்த இடத்தை குறிப்பிட்டிருந்தார். -BBC_Tamil