மரண தண்டனை நிறைவேற்றும் சிறிசேனவின் முடிவுக்கு எதிராக போராட்டம்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

கொழும்பு – வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை முதலாவது போராட்டம் தொடங்கியது.

வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட சமூக செயற்பாட்டாளர்கள், மரண தண்டனை நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர்.

மரண தண்டனை வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடைபெற்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாக அறிவித்திருந்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் கடந்த 26ம் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பல லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை காவுக் கொள்ளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முகமாகவே மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், போதைப்பொருள் கடத்தலுக்கு துணை போகும் நபர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனலின் தெற்காசிய கிளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதேபோன்று, சர்வதேச அமைப்புக்கள் பலவும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றன.
“ஒரு வாரத்திற்கு மரண தண்டனை நிறுத்தம்”

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இடைகால தடையை விதிக்குமாறு கூறி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்னவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டதுடன், இந்த மனு மீதான விசாரணைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரணை எதிர்வரும் 2ஆம் தேதியில் நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்ட மாஅதிபர், வெலிகடை சிறைச்சாலை பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோரின் உள்ளனர்.

அடுத்த 7 நாட்கள் மரண தண்டனை நிறைவேற்றப்படாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

எனினும், ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணை செய்யும் அதிகாரம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கிடையாது என சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிடர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த மனுவிற்கு எதிர்ப்பை வெளியிடுவதாகவும் சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். -BBC_Tamil

TAGS: