தமிழ் மொழியிலான வரலாற்றுப் பாடநூல்களைக் கற்கின்ற மாணவர்களுக்கு, தமிழர் மற்றும் இஸ்லாமியர் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்தினைத் தோற்றுவிக்கும் வகையில் பாடநூல்கள் அமைந்திருப்பது, கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மொழி மூலமான பாடத் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் குறித்த, முக்கிய விடயங்களை, பாராளுமன்றத்தின் அவதானத்திற்கு பலமுறை கொண்டு வந்துள்ளேன்.
இந்நாட்டில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழுகின்றபோது மட்டும், ஒரு சிலரால் வாய் வார்த்தையாக, அனைத்து இன மக்களும் இலங்கையர்களே எனகூறப்பட்டாலும், அதனை வரலாற்று ரீதியாக ஒப்புவிக்கக்கூடிய சான்றுகள் பலவுள்ள போதிலும், தமிழ் மொழியிலான பாடத் திட்டங்களில் அவை இல்லை. முலம் சொல்லப் போனால், இந் நாட்டில் பலராலும் மதிக்கப்படுகின்ற மஹாவம்சத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களைக் கூட, கல்வித்துறை ஏற்க மறுக்கின்ற நிலை காணப்படுவது கவனிக்கப்பட வேண்டியது.
இன மத பேதங்களை அகற்றி எல்லோரும் இந்நாட்டு மக்கள் என அனைத்து மக்களும் உணர்வு ரீதியில் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான வழிவகைகளை ஆரம்பக் கல்வித் திட்டத்திலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன் எஎனவும் குறிப்பிட்டார்.
-4tamilmedia.com