’200 வருடப் பிரச்சினையை 5 வருடங்களில் தீர்ப்பது கடினம்’

மலையக மக்களின் 200 வருடகாலப் பிரச்சினையை, 5 வருடங்களில் தீர்த்துவிட முடியாது என்று தெரிவித்த மலைநாட்டு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தாம் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர், இந்த 5 வருடக் காலப்பகுதியில், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு, தான் இந்த அமைச்சைப் பொறுப்பேற்ற போது, தோட்ட உட்கட்டமைப்பு என்ற அமைச்சே இருந்தது என்றும் தோட்டம் என்று அழைக்காமல்,  இந்த மக்களைப் புதிய பாதையில் இட்டுச் செல்லுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுரை வழங்கிய பின்னர், புதிய கிராமங்கள் அமைச்சாக இந்த அமைச்சு மாற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.

2020ஆம் ஆண்டுக்குள், 25,000 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும் என்பதே, தங்களது இலக்கு என்றும் அந்த வகையில், தற்போது 10,000 வீடுகள் அமைத்துள்ளமை, தங்களது அமைச்சின் பாரிய வெற்றி என்றும் கூறினார்.

நுவரெலியா, கேகாலை, பதுளை, பண்டாரவளை, பதுளை உள்ளிட்ட மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில், இதுவரை 8,133 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் 3,000 வீடுகள் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் வழங்குவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர ​மோடி, நோர்வூட் பிரதேசத்துக்கு வந்த போது அறிவித்தமைக்கு அமைய, இதற்கான வேலைத்திட்டங்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது என்றும் அவர் கூறினார்.

-tamilmirror.lk

TAGS: