அமனா: பெர்சத்துவின் அழைப்பு கட்சியை வலுப்படுத்தும் முயற்சி, அவ்வளவே

பக்கத்தான் ஹரப்பான் தலைமை மன்றக் கூட்டம் இன்று நடைபெறவுள்ள வேளையில் அமனா உயர் தலைவர்கள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மலாய்க் கட்சிகளை பெர்சத்துவில் வந்து சேருமாறு விடுத்த அழைப்பு “வழக்கமான” ஒன்றுதான் என்றும் அது கட்சியை வலுப்படுத்தும் ஒரு முயற்சி என்றும் கூறினர்.

இன்று நாடாளுமன்றத்தில் அமனா தலைவர் முகம்மட் சாபுவைச் செய்தியாளர்கள் வினவியபோது அரசியல் கட்சிகள் அவற்றின் உறுப்பினர் பலத்தைப் பெருக்க முற்படுபடுவது வழக்கமான ஒன்றுதான் என்றார்.

மலாய் ஒற்றுமை பற்றி நிறைய பேசப்பட்டுவரும் வேளையில் மலாய்க் கட்சிகள் பெர்சத்துவுடன் இணைய வேண்டும் என்று மகாதிர் அழைப்பு விடுத்திருப்பது பொருத்தமான ஒன்றே என்று தற்காப்பு அமைச்சருமான முகம்மட் சாபு கூறினார்.

“மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும். குறிப்பாக ஹரப்பானில் வந்து சேர வேண்டும். அப்போதுதான் அரசாங்கம் வலுவான ஒன்றாக திகழும்”, என்றாரவர்.

“இன்று பிற்பகல் பக்கத்தான் ஹரப்பான் தலைமை மன்றக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் (மகாதிரின் அழைப்பு குறித்து) விவாதிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், உறுப்பினர்கள் அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்க தடையில்லை”, என்றும் அவர் சொன்னார்.