“காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?” – இலங்கையில் மீண்டும் போராட்டம்

இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்கள், இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக நீதி கிடைப்பதற்கு, சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கையினை போராட்டக்காரர்கள் அப்போது முன்வைத்தனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய அமைப்பின் பிரதிநிதிகள், இந்தக் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வியாழக்கிழமையன்று வாக்களித்து.

அரசாங்கத்தைக் காப்பாற்றியுள்ள நிலையில், மேற்படி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை குற்றஞ்சாட்டி கருத்துக்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், அனைவராலும் தாங்கள் கைவிடப்பட்டுள்ளதாக உணர்வதாகவும் இந்தக் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக தம்மை அரசாங்கம் ஏமாற்றி வருவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

“எமது உறவுகளை கடத்திக் காணாமல் போக செய்தது இன அழிப்பாகும்”, சிங்கள ராணுவமே எங்களது உறவுகள் எங்கே” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறும், அவ்வாறான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் நடைபெற்றது.

இறுதி யுத்ததின்போது படையினரிடம் தமது பிள்ளைகளை ஒப்படைத்த போதிலும், இதுவரையில் அவர்கள் தொடர்பாக எந்த பதிலும் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் போராட்டக்காரர்கள் கூறினர்.

இலங்கை

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மதுபோதையிலேயே இவ்வாறான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாகவும், இன்றைய கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கடும் கண்டனத்தை வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை முதலாம் தேதி, தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றபோது, அந்த நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த இடத்துக்கு வந்த தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்; ஆர்ப்பாட்டக்காரர்கள் மது போதையிலேயே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதேவேளை இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி த. செல்வராணி என்பவர் ஊடகங்களிடம் பேசுகையில்; “காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளின் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, 10 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.” என்றார்

“இந்தப் 10 ஆண்டுகளும் இலங்கை அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த விடயத்தில் எமக்கு நீதி பெற்றுத் தருமாறு, சர்வதேசத்திடம் கையேந்தி நிக்கின்றோம். எங்களின் இந்தப் பிரச்சினையை சர்வதேசம் தீர்த்து வைக்க வேண்டும். அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோருக்கு அதிக கவனம் செலுத்திய இலங்கை அரசு, எங்கள் பிரச்சினையை கவனிக்காமலேயே உள்ளது.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஷ் ஈஸ்வரி ஊடகங்களிடம் பேசுகையில், “இறுதி யுத்தத்தின்போது ராணுவத்திடம் யாரும் சரணடையவில்லை என்றும், அரசாங்கத்திடம்தான் சரணடைந்ததாகவும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் கூறியிருந்தமை எமக்கு அதிர்ச்சியாக உள்ளது. அப்படியென்றால் அரசாங்கம் யார்? ராணுவம் யார் என்பது தொடர்பில் எங்களுக்கு மிகப்பெரிய கேள்வி உள்ளது. எவ்வாறாயினும், இறுதி யுத்தத்தில் எமது உறவுகளை அரசாங்கம்தான் பிடித்துள்ளது என்கிற உண்மையை, ராணுவம் இவ்வாறு கூறியதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளது”.

“எங்கள் உறவுகள் கடலில் வைத்துப் பிடிக்கப்பட்டார்கள். வீடு வீடாகப் பிடிக்கப்பட்டார்கள். வெள்ளை வேனில் கடத்தப்பட்டார்கள். இவை தவிர எங்கள் உறவுகளை நேரடியாகவே கையளித்திருந்தோம். இவ்வாறானவர்களைத்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.”

“எங்கள் உறவுகளை நாங்கள் தொலைத்ததாகவும், ராணுவத்திடம் கையளித்ததாகவும் நாங்கள் கூறுகின்றமை பொய் என்றால், அதற்காக அரசாங்கம் எங்களைக் கைது செய்யட்டும்” என்றும் அவர் கூறினார்.

இன்றைய கவன ஈர்ப்புப் போராட்டத்தில், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலுமுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil

TAGS: