கிட் சியாங்: மகாதிர் ஊழல்வாதி என்று நான் சொன்னதே இல்லை

டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு ஊழல்வாதி என்று தான் குற்றஞ்சாட்டியதே இல்லை என்கிறார் டிஏபி-இன் மூத்த தலைவர் லி கிட் சியாங்.

“அவர் ஊழல் செய்திருப்பதாக என்றும் நான் சொல்லியதில்லை. நான் பேசிய பேச்சுகளை எல்லாம் நீங்கள் பார்க்கலாம். எல்லாமே பத்திரமாக இருக்கும். டாக்டர் மகாதிர் ஊழல்வாதி என்று நான் கூறியதே இல்லை.

“அதிகார மீறல்களும் இன்ன பிறவும் நிகழ்ந்திருப்பதாகக் கூறியிருக்கலாம்”, என லிம் நியு ஸ்ரேட்ஸ்டைம்ஸ் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.

மகாதிர் முதல் தடவை ஆட்சியில் இருந்தபோது(1981- 2003) நிகழ்ந்த சில விவகாரங்கள்மீது விசாரணை தேவை என்று லிம் முன்பு கூறிவந்ததுபோல் இப்போதும் வலியுறுத்துவாரா என்று வினவியதற்கு இப்போது வேறு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.

“இப்போது நாம் புது மலேசியாவை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதே நல்லது என நினைக்கிறேன். அதே வேளை முன்பு நான் என்ன சொன்னேனோ அதிலிருந்து ஒரு வார்த்தைகூட மீட்டுக்கொள்ள மாட்டேன்”. என்றாரவர்.