தீவிரவாத செயற்பாடுகளுக்கு துணைபோவோருக்கும் தூக்கு; மைத்திரி அதிரடி

மரண தண்டனையை அமுல்படுத்தும் தனது தீர்மானத்திற்கு எதிராக சிலர் நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவர முயற்சிக்கின்ற செயற்பாட்டிற்குப் பின்னால் தீவிரவாத செயற்பாட்டுக்கு துணை போகும் முயற்சியே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு முயற்சிக்காத பிரிவினரும் மரண தண்டனையை அனுபவிப்பதற்கு தகுதியுடையவர்களே என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்தும் தனது தீர்மானத்திற்கு எதிராக சிலர் நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவர முயற்சிக்கின்ற செயற்பாட்டிற்குப் பின்னால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை தடுக்கத்தவறிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதை தடுக்கின்ற முயற்சியே இருப்பதாகவும் அவர் கூறினார்.

கண்டியிலுள்ள பெலேத ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வழிபாடுகளின் பின்னர் கருத்து வெளியிட்டபோதே இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த பிக்குமார்களை அவமானப்படுத்தும் அளவிற்கு எவராவது செயற்பட்டால் தகுதி தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து இதுவரை அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி சிறிசேன, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

-https://athirvu.in

TAGS: