பயங்கரவாதிகளிடம் நிதி வாங்கி பல்கலைக்கழகமமைத்த ஹிஸ்புல்லா; அம்பலமாகிய தகவல்!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு சவூதி அரேபியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றில் இருந்து 1757 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டிருக்கும் தகவல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் அம்பலமாகியுள்ளது.

உள்நாட்டு அரச வங்கி ஒன்றின் ஊடாக இந்த நிதி சம்பந்தமாக கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹஸ்புல்லா தலைமையில் மட்டக்களப்பில் சவூதி அரேபியாவின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட அரேபியப் பல்கலைக்கழகம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் குழுவொன்று அங்கு சென்று ஆராய்ந்திருந்ததோடு குறித்த பல்கலைக்கழகம் தென்னாசியாவில் அடிப்படைவாத இஸ்லாமியச் சிந்தனையை பரப்புவதற்காகவும் தீவிரவாதத்திற்கு பயிற்சியளிப்பதற்காகவும் பயன்படுத்தவே அமைக்கப்பட்டதாக விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையிலும் இந்த சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் குறித்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் விசாரணையும் நடத்தப்பட்டிருந்தது.

இந்தப் பல்கலைக்கழகம் குறித்து விசாரணை செய்துவருகின்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்றைய தினம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கமைய சர்ச்சைக்குரிய இந்தப் பல்கலைக்கழகம் நிர்மாணிப்பதற்காக 1757 கோடி ரூபா நிதி உதவியை சவூதி அரேபியாவிலுள்ள தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்று வழங்கியிருப்பதாகவும் உள்நாட்டிலுள்ள அரச வங்கி ஒன்றில் அந்த நிதி தொடர்பிலான கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட நிதி முழுமையாக பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டதா அல்லது தீவிரவாத செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.

-athirvu.in

TAGS: