அடுத்த பள்ளித் தவணையில் ஜனநாயகம் மற்றும் அரசமைப்புமீது தனியாக பாடங்கள் புகுத்தப்பட மாட்டா எனக் கல்வித் துணை அமைச்சர் தியோ நை சிங் இன்று கூறினார்.
அதேவேளை, நாட்டின் ஜனநாயக முறையை இளைஞர்கள் புரிந்துகொள்வதற்கு ஏற்ப நடப்புப் பாடத் திட்டங்களும் கல்வித் திட்டங்களும் செம்மைப்படுத்தப்படும் என்றாரவர்.
இதன் தொடர்பில் நான்காம் படிவ வரலாற்று நூலில் தேர்தல் பற்றி விளக்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஐந்து பக்கங்கள் அடுத்த ஆண்டு தொடங்கி 19 பக்கங்களாகக் கூட்டப்படும்.
அடுத்த பொதுத் தேர்தலில் 18வயது இளைஞர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதால் அதற்கேற்ப பள்ளிகளில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுமா என்று நாடாளுமன்றத்தின் மேலவையில் செனட்டர் கைருல் அஸ்வான் ஹருன் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது தியோ அவ்வாறு கூறினார்.
பள்ளிகளில் நான்காம் ஆண்டு தொடங்கி ஆறாம் படிவம்வரை ஜனநாயகம் பற்றியும் அரசமைப்புப் பற்றியும் நெடுகிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது என்றவர் விளக்கினார்.